புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று(செவ்வாய்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின.
12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன.
பாலாகோட், சாக்கோட், முஸாஃபராபாத் ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு பெரும் பின்னடைவாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.
இந்தநிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி ஊடகங்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
‘‘பாகிஸ்தான் பகுதிக்குள் புகுந்து இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியது எங்கள் நாட்டின் இறையான்மையை மதிக்காத செயல்.
பாகிஸ்தானை ஆக்கிரமிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகிறது. இதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் முறையிடுவோம்.
எங்களுக்கு ஆதரவான நாடுகளை அணி திரட்டுவோம். இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம்’’ எனக் கூறியுள்ளார்.