குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் ஆசைப்படுகிறார். அது நிராசையாக முடியும். திமுக எம்எல்ஏக்கள் தேர்தலை விரும்பவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று(வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி – திமுக எம்எல்ஏக்கள் குறித்து கூறினீர்கள். அதுபற்றி பட்டியலிட முடியுமா என ஜெ.அன்பழகன் கேட்டுள்ளாரே?
பதில் – “நேற்று ஊடகங்களில் இது பெரிய விவாதமாக ஆகியுள்ளது. நான் எந்தக் கருத்தில் தெரிவித்தேன் என்றால், பொதுவாகவே பொதுமக்களிடம் சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை 2021-ல் வர வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு தேர்தல் நடத்த மக்களுடைய வரிப்பணம் கிட்டத்தட்ட ரூ.3000 கோடி செலவாகும். தேர்தல் அடிக்கடி வரக்கூடாது என்கிற எதிர்ப்பார்ப்பு மக்களிடம் உள்ள நிலையில் ஒரு ஜனநாயக ரீதியில் 2021 வரையில் செயல்பட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசு இது.
2021-ல் மக்கள்தான் அதை ஆய்வு செய்கிற அதிகாரம் படைத்தவர்கள். அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகிற அரசு. ஆகவே 2021-ல் மீண்டும் நாங்கள்தான் மக்களுடைய ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடிப்போம். ஆனால் தற்போது ஸ்டாலினுக்கு என்ன அவசரம்.
அவருக்கு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்து முதல்வர் ஆக வேண்டும் அல்லது ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சியே இல்லாது தேர்தல் நடக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கிறார். அது நிறைவேறாது. ஆனால் அவர் தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்எல்ஏக்கள் விரும்ப மாட்டார்கள்.
ஏனென்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் 5 ஆண்டு முழுவதுமாகப் பூர்த்தி செய்யவேண்டும் என்று நினைப்பார்கள். அது அவர்களுக்கே தெரியும். மீண்டும் சீட்டு கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் மீண்டும் வெல்ல முடியுமா? என்ற எண்ணம் இருக்கும். இதைத்தான் அவர்கள் நினைப்பார்கள்.
ஆகவே இருக்கும் இரண்டரை ஆண்டுகளைப் பூர்த்தி செய்துவிட்டு போகத்தான் நினைப்பார்கள். ஏனென்றால் எம்எல்ஏ பதவி ஒரு மிகப்பெரிய பதவி. மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒன்று. அதனால்தான் அவர்கள் தேர்தல் வருவதை விரும்பவில்லை.
திமுக எம்எல்ஏக்கள் விரும்பாத ஒன்றை ஸ்டாலின் எந்த வகையிலாவது நிறைவேற்ற ஆசைப்பட்டால் அவரது ஆசை நிராசையாக முடியும்”. என தெரிவித்துள்ளார்.