2007 ஆம் ஆண்டு அனுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட இருவெளி தாக்குதல்களுக்கு உதவினார்கள் என்ற அடிப்படியில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம், சங்கானையைச் சேர்ந்த பி.அரவிந்தன் மற்றும் ராசவல்லன் தவரூபன் ஆகிய இருவருக்கு எதிராகவும் 2016 ஆம் ஆண்டு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று நீதிபதி மகேஷ் வீரமனினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சந்தேகநபர் இருவரும், மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து இருவரும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2007ஆம் ஆண்டு ஒக்ரோபர் 22ஆம் திகதி அதிகாலை எல்லாளன் நடவடிக்கை எனப் பெயரிடப்பட்டு அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வான்வழித் தாக்குதல் மற்றும் தற்கொலைக் குண்டுத் தாக்குல் என்பன நடத்தப்பட்டன.
இதன்போது, இலங்கை பாதுகாப்பு படையின் 14 பேரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலை குண்டுதாரிகள் 21 பேரும் கொல்லப்பட்டனர்.
சங்கானையைச் சேர்ந்த பி.அரவிந்தன் மற்றும் ராசவல்லன் தவரூபன் ஆகிய இருவரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
16 விமானங்களை அழித்து 400 கோடி ரூபாயை நட்டப்படுத்தியமை பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த 14 பேரைக் கொலை செய்தமை ஆகியவற்றுக்கு உதவினர் என்ற குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கி அவர்கள் இருவருக்கும் எதிராக அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றில் 2016ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.