இப்புத்தகம் இராவணனை உயர்த்தி பிராமணர்கள், ராம லக்ஷ்மண அனுமன், இந்து மத வர்ணாசிரமத்தை விமர்சிக்கும் புத்தகம்.
ஆனால், இதில் நடந்து இருப்பது அனைத்தும் புனைவு அல்ல சமகாலத்திலும் நடந்து கொண்டு இருக்கக் கூடிய விசயங்கள் என்ற எண்ணத்தில் படித்தால், நிச்சயம் உங்கள் எண்ணத்தில் மாற்றம் வர வாய்ப்புண்டு.
முன் முடிவோடு படித்தால், இதை ரசிப்பது புரிந்து கொள்வது சிரமம். நான் நிறையப் பகிர / தெரிந்து கொள்ள விரும்புகிறேன். எனவே, ஆர்வம் இருப்பவர்கள் மட்டும் தொடருங்கள், மற்றவர்கள் இன்னொரு இடுகையில் சந்தியுங்கள். Image Credit – www.tamilbookman.in
பொன்னியின் செல்வன் படித்த பிறகு புத்தகங்களைப் படிப்பதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. கிடைத்த புத்தகம் படிக்கலாம் என்று முடிவு செய்து நண்பன் பாபு கொடுத்த “அசுரன்” படித்தேன். என்னமோ நினைத்துச் சாதாரணமாக ஆரம்பித்து, சுமாராகச் சென்று பின் பட்டையக் கிளப்பி விட்டது .
ராவணன் தன் வரலாறு
இந்நாவல் ராவணன் தன் வரலாறு கூறுவது. எந்த ஒரு சம்பவத்திற்கும் இரண்டு பக்கம் இருக்கும். நம்மில் பெரும்பாலனவர்கள் ராமாயணம் படித்து / தொலைக்காட்சிகளில் பார்த்து இருப்போம்.
இதைப் பார்ப்பவர்கள் ராமன் கடவுள், மிக நல்லவன், எந்தத் தவறும் செய்யாதவன், ஒழுக்கமானவன், தேவர்கள் என்றால் நல்லவர்கள், அசுரர்கள் மோசமானவர்கள் என்ற எண்ணம் தான் இருக்கும். இதற்கு நம் எண்ணங்களும் பழக்கப்பட்டு இருக்கிறது.
இராவணன் சீதையைக் கடத்தினான் அதனால் பிரச்சனை ஆனது என்று தானே தெரியும், அவனைப் பற்றி வேறு எதுவும் தெரியாதல்லவா! அது பற்றிக் கூறுவதே இந்த அசுரன்.
இந்நாவல் இராவணன் பார்வையிலும் சாதாரணக் குடிமகனான அசுரன் “பத்ரன்” பார்வையிலும் விரிகிறது. இருவரும் மாற்றி மாற்றித் தங்கள் வாழ்க்கைச் சம்பவங்களைக் கூறி வருவதே இந்தப் புத்தகம். இந்தப் புத்தகம் முடிக்கும் போது என்னில் ஏகப்பட்ட மாற்றங்கள்.
நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
இராவணன் தந்தை பிரமாணர்
இராவணன் தந்தை பிரமாணர், தாய் அசுர குலம். மாற்றாந்தாய் மகனான குபேரன் இலங்கையை ஆண்டு வருகிறான்.
தனது தந்தை உடனில்லாமல் தன் தாய் தன் தம்பிகள் கும்பகர்ணன், விபீஷணனுடன் வாழ்க்கையில் சாப்பாட்டிற்குக் கூடச் சிரமப்படும் இராவணன், இந்தியா சென்று அங்கு அனைத்தையும் கற்றுப் பின்னர் இலங்கை அரசன் குபேரனை சூழ்ச்சி செய்து வீழ்த்தியதால் 20 க்கு குறைவான வயதில் இலங்கை அரசனாகிறான்.
இவ்வாறு சூழ்ச்சி செய்து அரசனானதை அவன் விரும்பவில்லை என்றாலும், அவன் விரும்பாமலே பத்ரன் மூலம் கிடைக்கிறது.
அனுபவம் இல்லா இளைஞனான இராவணன் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும், போர்களும் பின்னர் அவனுடன் இருக்கும் அதிகாரிகள் அமைச்சர்களுடன் ஏற்படும் மனத்தாங்கல் அவன் அவசரப்பட்டுச் செய்யும் தவறுகள் என்று விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
இராவணன் பெரும்பாலும் சரியான முடிவுகளையே எடுக்கிறான் ஆனால், அவனின் மந்திரி பிரஹஸ்தன் அதே யோசனையைக் கூறும் போது, இவன் கூறியதை நாமும் கூறுவதா?! என்று அகங்காரத்தால் மாற்றிக் கூறி அதனால், பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வருகிறது.
முற்போக்குக் கலாச்சாரம்
அசுரர்கள் பொதுவாகவே மேம்பட்ட, முற்போக்குக் கலாச்சாரத்தைக் கொண்டு இருந்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சிவனை வழிபடும் இவர்கள் தேவர்களையும் அவர்களுக்குத் துணை இருக்கும் பிராமணர்களையும் மிகவும் வெறுக்கிறார்கள்.
பத்ரன்
“பத்ரன்” என்ற அசுரன் இந்தியாவில் ஒரு கிராமத்தில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் போது, தேவர்கள் படையெடுப்பில் இவனது குடும்பம் சூறையாடப் படுகிறது.
இவனது குழந்தை மிக மோசமாகக் கொல்லப்பட்டு அவனுடைய மனைவி தேவர்களால் வன்புணர்வு செய்யப்படுகிறாள்.
இதற்குப் பழிவாங்கும் வெறி அவனுள் கொழுந்து விட்டு எரிந்து அதை நிறைவேற்ற இராவணனுடன் இணைய முயற்சிக்கிறான் ஆனால், இராவணன் சந்தர்ப்ப சூழ்நிலையால் அல்லது அவனது தவறான கணிப்பால் பத்ரனை முழுமையாக நம்பக் கடைசி வரை மறுக்கிறான்.
இலங்கையில் ஆட்சி ஓரளவிற்கு நிலையான பிறகு இந்தியா மீது படையெடுத்துச் சென்று அங்குள்ள பகுதிகளை இராவணன் தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருகிறான். நகரத்தில் அனைத்தையும் நாசம் செய்கிறார்கள், கொள்ளை அடிக்கிறார்கள்.
மூன்று விசயம்
அசுரர்களாக இருந்தாலும் தேவர்களாக இருந்தாலும், போரில் வெற்றி பெற்றால் மூன்று விசயம் தவறாமல் நடக்கிறது.
ஒன்று கோவில் நகரங்களை அழிப்பது, இரண்டாவது கொள்ளை அடிப்பது, பொதுமக்களைக் கொலை செய்வது மூன்றாவது பெண்களை வன்புணர்வு செய்வது. இந்த விசயம் இந்தக் காலத்தில் நடந்த ஈழப் போர் வரை தொடர்ந்து கொண்டு இருக்கும் உண்மை.
சமத்துவம்
அசுரர்கள் இடையே சமத்துவம் நிலவுகிறது. அனைவரும் சமம். அங்கும் ஏழைகள் பணக்காரர்கள் என்ற பிரிவும் பாகுபாடும் இருக்கிறது ஆனால், சாதிப்பாகுபாடு பழமையான எண்ணங்கள் கிடையாது.
இந்த நிலையில் அயோத்தியை அடையும் இராவணன் அங்கே பிராமணர்கள் இடையே நிலவும் சூழ்நிலையைப் பார்த்து எரிச்சலும் ஆச்சர்யமும் அடைகிறான்.
ஏன் மக்கள் அசுத்தமாக இருக்கிறார்கள்? நகரங்கள் ஏன் பாழடைந்து கிடக்கிறது? பெண்கள் ஏன் முக்காடு போட்டுச் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்? ஏன் சிலர் ஓரமாக நடந்து போகிறார்கள்? என்று ஆச்சர்யப்படுகிறான்.
அசுர குலத்தில் பெண்கள் சம உரிமை பெற்றவர்கள். அங்கே கணவன் இறந்தால் இன்னொரு திருமணம் செய்வது, மற்றவர்களுடன் கலந்து பேசுவது என்பது சகஜமான ஒன்று. இராவணன் மனைவி மண்டோதரியே இராவணனை பெயர் கூறித் தான் அழைப்பாள்.
இதையெல்லாம் பார்த்து, நம்ம பெண்கள் எல்லாம் இலங்கையில் எவ்வளவு முற்போக்காக இருக்கிறார்கள், அயோத்தி நிலையை நம் நாட்டில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே!! என்று வியப்பான்.
சீதை இராவணனின் மகள்
இதில் பெரிய திருப்பமாகச் சீதை இராவணனின் மகள் என்பதாக வருகிறது. இந்துக்களில் பெரும்பான்மையானவர்கள் மதிக்கும், கடவுள் போல எண்ணும் ராமனை இதில் ஆசிரியர் புரட்டி எடுத்து விட்டார்.
சீதையின் சுயம்வரத்தில், இராவணன் ராமனைப் பார்த்து “ஐயோ! இவன் நம் மகளுக்கு (சீதைக்கு) கணவனா!!” என்று ஜீரணிக்க முடியாமல் புலம்புவது செம ரகளையாக இருக்கும்.
அதோடு “ஒரு பெண்ணை காட்சிப் பொருளாக்கி ஏலம் இடுகிறார்களே! என்ன ஒரு மோசமான செயல்!” என்று கோபப்படுவான்.
பின்னர் ராமன், பின்னாடி இருந்து வாலியைக் கொன்றதையும், போர் நெறிமுறைகளை ராமன் பின்பற்றாமல் நடந்து கொண்டதையும் வைத்து ராமன் மீது இராவணனுக்கு மிகுந்த வெறுப்பு ஏற்படும்.
போர் விதிமுறைகளைப் பின்பற்றாத இவன் எல்லாம் ஒரு ஆளு?! என்கிற அளவில் தான் இராவணன் நினைத்துக் கொண்டு இருப்பான். இதை ராம பக்தர்கள் படித்தால் இரத்தக் கொதிப்பு வந்தாலும் வந்து விடும்
அனுமன்
இலங்கையில் அனுமன் வாலில் தீ வைத்ததையும் அதன் மூலம் இலங்கையை அனுமன் அழித்ததையும் நாம் தொலைக்காட்சியில் பார்த்து சிரித்து இருப்போம்.
ஆனால், அனுமன் தீ வைத்த பிறகு அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள், அதனால் ஏற்பட்ட சேதங்கள் போன்றவற்றைப் படிக்கும் போது அனுமன் மீது நமக்கே ஒரு வெறுப்பு வந்து விடும்.
அதோடு வானரங்கள் இறுதிப் போரில் மண்டோதரியிடம் நடந்து கொள்ளும் முறைகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இராவணன் தேவர்களுடன் / ராமனுடன் போர் விதிமுறைகளுடன் நேர்மையாகப் போர் புரிவதாலே பல இன்னல்களை எதிர்கொள்ள நேர்கிறது.
இந்தியாவில் இராவணன் போர் செய்து கொண்டு இருக்கும் போது ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் அனைத்தையும் இழந்து இலங்கை வருகிறான். அந்தச் சமயத்தில் பிராமணர்களும் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கையில் நுழைகிறார்கள். அவர்களுக்கு விபீஷணன் ஆதரவாக இருக்கிறான்.
பல வருடங்களுக்குப் பிறகு அனுபவங்களைப் பெற்ற இராவணன், அனைத்து மக்களையும் சரி சமமாக நடத்த முயற்சிக்கிறான். சிறுபான்மையினரான பிராமணர்களுக்கு வசதிகள், கோவில்கள் ஏற்படுத்திக் கொடுக்கிறான்.
தீண்டாமை & சாதிப் பாகுபாடு
கொஞ்சம் நிலையாகும் பிராமணர்கள் தீண்டாமை, சாதிப் பாகுபாடு போன்றவற்றை அசுரர்களிடம் காட்டும் போது இது பற்றிக் கேள்விப் பட்டிராத அசுரர்களுக்கு இது எரிச்சலைத் தருகிறது. இது அசுரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி, ஒரு கட்டத்தில் கலவரமாக வெடிக்கிறது.
பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்று அவர்கள் கூறுவதை அசுரர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
ஏனென்றால், சமத்துவம் நிலவிய இடத்தில் திடீர் என்று பிராமணர்கள் சாதி, தீண்டாமை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று கிளம்பியதை அசுரர்கள் விரும்பவில்லை.
ஆனாலும், ஒரு சில அசுரர்கள் பிராமணர்களாக இருந்தால் கிடைக்கும் மரியாதைக்காக அவர்களும் பிராமணர்களாக மாறிக் கொள்கிறார்கள்.
இவ்வாறு மாறுபவர்கள் மிகவும் சுத்தமாக இருக்க முயற்சி செய்து தன் இன மக்கள் தொட்டாலே தீட்டாகக் கருதுகிறார்கள்.
இதை விளையாட்டாக நினைத்து அசுரர்கள் அவர்களைத் தொடுவதும் அவர்கள் குளிப்பதும் என்று ஒரு நாளைக்கு 10 முறை கூடக் குளிக்க வைத்து விடுகிறார்கள். இவர்கள் இதை விளையாட்டாகச் செய்து கொண்டு இருக்கும் நேரங்களில் பிராமணர்கள் ஆழமாக வேரூன்றி விடுகிறார்கள்.
என் சென்னை அனுபவம்
நான் சென்னையில் படித்துப் பின் வேலையில் இருந்த போது நண்பர்களுடன் 10 வருடங்கள் ஒரே அறையில் இருந்தேன். நாங்கள் இருந்த பகுதி பிராமணர்கள் நிறைந்த மைலாப்பூர் பகுதி. எங்கள் பக்கத்து வீடே பிராமணர் தான். வயது முதிர்ந்தவர் 65+ இருக்கும்.
நாங்கள் துணி காய வைக்கும் போது அவர் வீட்டு அருகே துணி நகர்ந்து விட்டால், கண்டபடி சத்தம் போடுவார்.
எங்களுக்கு இதனாலே அவரை வெறுப்பேத்த வேண்டும் என்றே ஏதாவது செய்வோம். எங்களைத் தொட வேண்டாம் என்பார் ஆனால், அவர் வீட்டை சுத்தமின்றிக் கொடுமையாக வைத்து இருப்பார். அதோடு அவர் செய்த சில காரியங்கள் இருக்கிறது… அது வேண்டாம்.
அசுரர்கள் செய்ததைப் படித்த பொழுது எனக்கு இந்தச் சம்பவங்கள் தான் நினைவிற்கு வந்தன.
வர்ணாசிரமம்
ராமன் இராவணனை வென்று இலங்கை அசுரர்களை வர்ணாசிரமப்படி பிரிக்கிறான். அதாவது விஷ்ணு தலையில் இருந்து முகம், கைகள், தொடைகள் மற்றும் கால்களிலிருந்து முறையே தோன்றியவர்கள் வேதியர், சத்திரியர், வணிகர் மற்றும் சூத்திரர் என்று பிரிக்கிறார்கள்.
சமத்துவமாக வாழ்ந்த இவர்களுக்குத் திடீர் என்று அவர்களிடையே சாதியை உருவாக்கி மேலானவன் கீழானவன் தீண்டத் தகாதவன் என்று பிரிக்கும் போது அது அவர்களை மிகவும் காயப்படுத்துகிறது. இந்தக் காட்சியை வர்ணிக்கும் போது அற்புதமாக இருக்கிறது.
பிராமணர்கள் அல்லாத இந்துக்கள் இதைப் படித்தால், தங்களை அதில் நிறுத்திப் பார்க்காமல் இருக்கவே முடியாது.
விபீஷணன்
விபீஷணன் முன்பு இருந்தே பிராமண முறைகள் விதிகள் மீது பற்றுக் கொண்டு இருப்பான். எனவே, ராமன் உடன் இருக்கும் பிராமணர்கள் செய்யும் அலப்பரையை விட இவன் அட்டகாசம் செய்து கொண்டு இருப்பான்.
மதம் மாறியும் பிரச்சனை
மதம் மாறுதல் அதிகமாக முஸ்லிம் கிறித்துவ மதங்களில் தான் நடக்கும். இந்து மதத்தில் இருந்து தீண்டாமை காரணமாக, வேறு மதம் மாறினாலும் அங்கும் இதே பிரச்சனை தான். அவர்களிலும் சேர்த்துக் கொள்ளாமல் தனிப் பிரிவாக வைத்து விடுவார்கள்.
இது பற்றித் தனிப் புத்தகமே வந்து இருக்கிறது.
உண்மையான முஸ்லிம் கிறித்துவர்கள் கூட அமைதியாக இருப்பார்கள் ஆனால், மதம் மாறி இருக்கிறவங்க பண்ணுற அட்டகாசம் இருக்கே..! என்னமோ இவங்க தான் மதத்தையே உருவாக்கியவர்கள் போல நடந்து கொள்வார்கள்.
குறிப்பாகக் கிறித்துவ மதத்திற்கு மாறியவர்களில் இதை அதிகம் காணலாம். எனக்கு விபீஷணன் செய்வதைப் பார்க்கும் போது இது தான் நினைவிற்கு வந்தது. இதிலேயே இருப்பவர்கள் அமைதியாக இருக்க, இவன் தீவிரமாக இருப்பான்.
திராவிடர் கழகம்
நான் சென்னை வந்ததில் இருந்து மைலாப்பூர் பகுதியில் தான் இருந்தேன். அப்போது திக காரங்க குளத்தின் அருகே பிராமணர்களை அநாகரிகமாக ஒலிப்பெருக்கியில் விமர்சித்துக் கொண்டு இருப்பார்கள், எரிச்சலாக இருக்கும்.
சங்கீதா ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த ஒரு பிராமணக் குடும்பம், இதைக் கேட்டு கொந்தளித்தது இன்றும் நினைவு இருக்கிறது.
இணையத்திலும் இந்தத் திக / கம்யூனிச கோஷ்டி எப்பப் பார்த்தாலும் பிராமணர்களைத் திட்டிக்கொண்டே இருப்பார்கள். கிட்டத்தட்ட 20 வருடமாகக் கேட்டு வருகிறேன் ஆனால், என்னுள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
அட! இவங்க இப்படித்தான் கத்திட்டே இருப்பாங்க என்ற எண்ணம் தான் இங்குப் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது.
பிராமணர்கள் மீது தவறுகள் இருக்கிறது, தீண்டாமை என்பது கொடுமையான குற்றம் எல்லாம் சரி ஆனால், அதைக் கண்டிக்க / உணர வைக்க இவர்கள் வெளிப்படுத்தும் முறை சரியானதல்ல.
இவர்கள் முரட்டுத்தனமாகத் தங்கள் எதிர்ப்பைக் காட்டி, அநாகரிகமாக நடந்து கொள்வதால் இவர்கள் கூறும் விசயம் பற்றித் தெரிந்து இராதவர்கள் இவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுப்பதில்லை.
இந்தக் கருத்துகளில் ஏற்புடையவர்கள் மட்டுமே இது குறித்து விவாதிப்பார்கள். தெரிந்தவரே அதைப் பேசுவதில் என்ன பயன்?
தெரியாதவர்களுக்கு, என்ன பிரச்சனை? என்ன நடந்தது? வர்ணாசிரமம் என்றால் என்ன? ஏன் தீண்டாமை உள்ளது? எப்படி வந்தது?
என்பதை யோசிக்க வைக்கும் எளிமையான முறையைப் பின்பற்றாமல் பிராமணர்களைத் திட்டிக்கொண்டு இருந்தால், என்ன நடக்கும்?
தீண்டாமையைப் பிராமணர்கள் மட்டுமே செய்வதில்லை, ஆதிக்க சக்தியினர் அனைவரும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் பல வருடங்களாகக் கதறியும் கேட்காத என் காது / மனது இந்த ஒரே ஒரு புத்தகம் படித்து என்னுள் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திணிப்பு
எனக்கு இப்புத்தகம் ஒன்றை தெளிவாக விளக்கியது. எதையும் கூற வேண்டிய விதத்தில் கூறினால் கேட்க ஆள் இருக்கிறார்கள் என்பது ஆனால், உன்னுடைய விருப்பை / வெறுப்பை என் மீது திணித்தால், நான் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன்.
திக செய்வது திணிப்பு, இப்புத்தகம் கொடுப்பது எளிமையான விளக்கம். இப்பச் சொல்லுங்க திக கதறிக் கொண்டு இருப்பதால் என்ன பயன்?
Blog ல ஓவியான்னு ஒரு திக காரர் ஓயாம பிராமணர்களை / இந்து மதத்தைத் திட்டிட்டே இருப்பாரு. யாராவது அதைக் கண்டுக்கறாங்களா?! ஏன்? காரணம், அவரின் எண்ணங்களை மற்றவர் மீது திணிக்கிறார் எனவே, எவரும் அதைக் கண்டு கொள்வதில்லை.
இதனால் என்ன பயன்? உண்மையில் அவரின் உழைப்பு அபரிமிதமானது ஆனால், அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராக வீணாகிறது.
பகுத்தறிவாளர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் போராடுபவர்கள் இது போன்ற தீவிரப் பிரச்சாரங்களால் இவர்கள் நினைப்பது போல மாற்றங்களைக் கொண்டு வந்து விட முடியாது.
ஏனென்றால், இவர்கள் செய்து கொண்டு இருப்பது திணிப்பு, வெறுப்பு. முறையான வழிமுறைகள், விளக்கங்கள் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தப் புத்தகம் அதற்கு சிறப்பான உதாரணம்.
தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுக்கு மரியாதை கிடைக்கும் என்ற எண்ணத்தில் இந்து மதத்தில் இருந்து வேறு மதங்களுக்கு மாறினால் சிலர் கோபப்படுகிறார்கள். மாறிய பிறகு அவர்கள் எதிர்பார்த்த சமூக மரியாதை கிடைக்கிறதா? என்பது வேறு விசயம்.
நல்ல நிலையில் உள்ளவர்கள் சமூகத்தில் மரியாதையுடன் இருப்பவர்கள், மதம் மாறுபவர்கள் குறித்து எப்படி வேண்டும் என்றாலும் விமர்சிக்கலாம் ஆனால், அவமானப்பட்டவர்கள் மட்டுமே இது குறித்துக் கருத்து தெரிவிக்க உரிமையுண்டு.
எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் சமூக அவமானத்தை, தீண்டாமையைத் தான் எதிர்கொண்டால் இது போலக் கூறுவார்களா! என்பதை மனசாட்சியுடன் யோசித்துப் பார்க்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தித் தங்கள் மதங்களுக்கு இழுப்பது மோசமான செயல். இது போலச் செய்வதில் கிறித்துவர்களே முன்னணியில் இருக்கிறார்கள்.
திணிப்பு இல்லாத வர்ணிப்பு
இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தீண்டாமை, சாதி, தாழ்த்தப்பட்டவர்கள் போன்றவற்றிக்காக எந்த இடத்திலும் வக்காலத்து வாங்கவில்லை.
ஆனால், அவர்களுக்கு ஏற்படும் வலியையும், வர்ணாசிரமத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும் அழகாகச் சம்பவங்களாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.
இராவணன் பற்றிய புத்தகம் என்றாலும் அவனை மிகவும் உயர்த்தியும் கூறவில்லை, அவன் மீதும் பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார், கீழ்த்தரமாக நடந்து கொண்டதை விவரிக்கிறார் எனவே, அவர் கூறும் மற்ற விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கேட்கத் தோன்றுகிறது.
அவர் வர்ணாசிரமத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக எந்த இடத்திலும் நியாயம் பேசாமல் அவர்கள் நிலையிலேயே கூறிக்கொண்டு போகிறார்.
எனவே பிராமணர்கள் அல்லாத இந்துக்கள் அந்த நிலையில் அவர் கூறாமலே தன்னை நிறுத்திப் பார்க்க முடிகிறது. நாம் எந்த நிலை என்று யோசிக்க வைக்கிறது. பின்னர் அது குறித்துக் கோபம் கொள்ள வைக்கிறது ஆனால், இது எதுவுமே திணிப்பு இல்லை.
வர்ணாசிரம விளக்கம்
இறுதிப் போரில் இராவணன் வீழ்த்தப்பட்டு விடுவான் என்பதைப் பொதுமக்கள் உணர்ந்து விடுவார்கள். இராவணன் அரசு மாறினால் இவர்கள் எதற்குப் பயப்படுவார்கள் தெரியுமா?
ராமன் / பிராமணர்கள் புகுத்தும் சாதி முறைகளுக்கும் வர்ணாசிரமத்திற்கும் தான்.
இலங்கையை வெற்றிக் கொண்ட ராமன் அங்கே கூடியிருக்கும் மக்களிடையே வர்ணாசிரமத்தை விவரிக்கும் போது அசுரர்கள் திகிலடைந்து, பிராமணர்களை எதிர் கொள்வது எப்படி என்று பயந்து இருப்பார்கள். Image Credit – asura.co.in
மலையாளம் எப்படி?
இதில் என்ன ஆச்சர்யம் என்றால், இந்தப் புத்தகம் எழுதியவரும் ஒரு பிராமணர் (ஐயர் – சைவம் – சிவன்) தான். கேரளாவைச் சார்ந்தவர். இந்தப் புத்தகத்தில் அசுரர்கள் செண்டை மேளம் அடிப்பதாகவும், களறிச் சண்டை பயில்வதையும் குறிப்பிட்டு வருகிறது.
அதோடு ஒரு இடத்தில் ஓணம் பண்டிகையைக் குறிப்பிட்டு வருகிறது.
மலையாளம் தமிழில் இருந்து பிரிந்து சென்றது என்பது பலருக்கும் தெரிந்து இருக்கும். அப்படியென்றால் அப்போதே கேரள கலாச்சாரங்கள் எப்படி அசுரர்களிடையே வந்தது?
இந்தச் செண்டை மேளம், களரி, ஓணம் போன்றவை தமிழுடன் முன்பே இணைந்து இருந்ததா? அல்லது இவர் கேரளா என்பதால் அவர் மாநிலத்திற்கும் சேர்த்து எழுதிவிட்டாரா? விசயம் தெரிந்தவர்கள் கூறவும்.
இது புனைவு தான் ஆனால், ராமாயணம் உண்மையில் நடந்து இருக்கிறது / இல்லை என்ற முடிவில்லா சர்ச்சை இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
ராமன் வர்ணாசிரமத்தை வைத்து கர்ம வினை பற்றியும் கூறுவார். நான் 2014 ல் கர்ம வினை பற்றி எழுதி இருந்தேன். அதில் பின்னூட்டம் போட்டு இருந்த சுந்தர்ராசன் என்பவர் வர்ணாசிரம் குறித்துப் படியுங்கள் என்று கூறி இருந்தார்.
அது குறித்து அரைகுறையாகத் தெரிந்து இருந்தாலும், அதில் மேலும் படிக்க ஆர்வமில்லை ஆனால், அதை என் மனதில் குறித்து வைத்துக் கொண்டேன். இதைப் படிக்கும் போது சரியாக எனக்கு அவர் கூறியது நினைவிற்கு வந்தது.
நான் கூறிய கர்ம வினை விளக்கம் வர்ணாசிரமத்தைப் வைத்து இல்லை, ஒரு வினைக்குண்டான எதிர்வினை உண்டு என்பதை விளக்குவது. அதே போல விதியின் மீது பழியைப் போட்டுக்கொண்டு தப்பித்துக் கொள்ளக் கூடாது என்பதையும் குறிப்பிட்டு இருந்தேன்.
இருப்பினும் அவர் கூறியது போல இது குறித்த புத்தகங்கள் படிப்பது மேலும் பல கேள்விகளுக்கு விடை கொடுக்கும். கர்மவினை என்னுடைய வாழ்வில் ஒவ்வொரு சம்பவத்திலும் செயலிலும் என்னால் இன்று வரை உணர முடிகிறது.
மாற்றம் காணும் இந்து மதம்
எனக்கு “இந்து” மதம் ரொம்பப் பிடிக்கும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் ஆனால், தவறுகள் இருந்தால் அதை மாற்றிக் / ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்தக் கூச்சமோ பிடிவாதமோ இருந்ததில்லை.
ஏனென்றால் நான் இந்து மதத்தை ரசிக்கிறேன் ஆனால், அனைத்திற்கும் கொடி பிடித்தல்ல.
குறைகள் இல்லாத மதம் ஏது? இந்து மதம் ஒரு Flexi மதம் என்று முன்பே கூறி இருந்தேன். எத்தனையோ பழமையான வாழ்க்கை முறைகளில் இருந்து தன்னைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே வந்துள்ளது, மாற்றிக்கொண்டே இருக்கும். யாருமே தடுக்க முடியாது.
கணவன் இறந்தால், மொட்டை அடித்து முக்காடு போட்டு இருந்த பெண்கள் இன்று சகஜமாக இருக்கிறார்கள். வெள்ளைப் புடவை ஒழிந்திருக்கிறது. கூனிக் குறுகி நின்ற தாழ்த்தப்பட்டவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
பிராமணர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்ற நிலை மாறி இருக்கிறது.
உடன்கட்டை ஏறுதல் என்ற ஒரு சம்பவம் நடந்ததா!? என்று ஆச்சர்யமாகக் கேட்கும் அளவிற்குப் பெண்கள் நிலை மாறியுள்ளது. கணவனின் பெயரை மற்றவர்களிடம் கூறவே பயப்பட்டவர்கள் இன்று உரிமையோடு அழைக்கும் அளவிற்குச் சுதந்திரம் அடைந்து இருக்கிறார்கள்.
திறமை இருந்தால் எவரும் உயர முடியும் என்ற நிலை வந்து இருக்கிறது.
சாதி மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது, இது மாறும் என்று நம்பிக்கையில்லை.
தீண்டாமை என்பது இந்து மதத்தில் மட்டுமே உள்ளதா?
தீண்டாமை என்பது இந்து மதத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றல்ல. வளர்ந்த நாடுகளிலும் / மற்ற மதங்களில் வேறு பெயர்களில் பழக்க வழக்கங்களில் இருப்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கும் ஆனால், இந்து மதத்தில் இப்படி ஒரு அமைப்பாக இருப்பது தான் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இது எந்தக் காரணத்திற்காக ஏற்படுத்தியிருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.
Django – Unchained என்ற படத்தில் வெள்ளையர்கள் இனவெறி (1858) கொண்டு இருந்ததையும், கருப்பர்களை அடிமையாக, மிருகங்களை விட மோசமாக நடத்தியது பற்றியும் வரும்.
மேம்பட்ட எண்ணங்களைக் கொண்டவர்களாக நாம் நினைக்கும் வெள்ளையர்கள் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டார்கள் என்பதையும் இது விளக்கும்.
இவர்களிடமும் தீண்டாமை, தாழ்த்தப்பட்டவர்கள் என்ற எண்ணம் இருந்தது ஆனால், இவர்களிடம் வர்ணாசிரமம் போன்ற அடிப்படைப் பிரிவுகள் இல்லை. எனவே, காலப்போக்கில் தீண்டாமை அவர்களிடம் இருந்து மறைந்து விட்டன.
அவ்வபோது இன்னமும் நடக்கிறது என்றாலும், ஒப்பீட்டளவில் குறைவு. இதுவே வித்யாசம்.
Read: தீண்டாமை எப்போது ஒழியும்?
நெருக்கடி
சீதையின் கற்பை நிரூபிக்கப் பண்டிதர்கள் சீதையைத் தீக்குளிக்கக் கூறுவார்கள், சீதைக்கு அதிர்ச்சியாக இருக்கும். ராமன் எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் இருப்பான். இதே போலத் தீக்குளிப்பு பிறகு ஒரு சமயத்தில் திரும்ப வரும்.
முன்பு ராமனுக்காக இராவணனிடம் வாதாடிய சீதை தற்போது ராமனின் செய்கையைப் பார்த்து மிகவும் நொந்து போய் விடுவாள்.
ராமன் கதாப்பாத்திரம் சூழ்நிலை கைதியாகவும் பெரும்பாலும் மற்றவர்களுக்காகவே வாழ்வதாகவும், தான் நேர்மையானவன் நல்லவன் என்பதை நிரூபித்தே அவன் வாழ்க்கை ஒன்றுமில்லாமல் போவதாகக் காட்டப்பட்டுள்ளது.
அதாவது நான் அடிக்கடி கூறும் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முயற்சி செய்து தன் மனைவிக்குக் கூட நேர்மையாக இல்லாதவனாக ஆகி விடுகிறான்.
எனவே மக்களே! அனைவருக்கும் நல்லவராக இருக்க முயற்சிக்காதீர்கள், உங்கள் மனசாட்சிக்கு மட்டும் நியாயமாக இருந்தால் போதும் .
இயல்பான வர்ணனை
ஆசிரியர் எந்த இடத்திலும் இந்நாவலில் மந்திர தந்திரங்களை புகுத்தாமல் மனிதர்களிடையே இயல்பாக நடப்பவற்றை நம்பும்படி எடுத்துக்காட்டியுள்ளது பாராட்டத்தக்கது. நான் சீதை தீக்குளிப்பு காட்சிகளில் என்ன செய்வார்? என்று ஆர்வமாக இருந்தேன்.
அதையும் நம்பும் விதத்தில் கொண்டு சென்று இருக்கிறார். முதலாவது தீக்குளிப்பை ஊகித்து விடலாம் ஆனால், இரண்டாவதை ஊகிக்க முடியாது, நமக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கும்.
போர் முடிந்து வர்ணாசிரம விளக்கம் மற்றும் விபீஷணன் தான் இனி இலங்கையின் அரசன் என்ற அறிவிப்பு முடிந்த பிறகு, இராவணன் கொல்லப்பட்ட நாளை அனைத்து மக்களும் தங்கள் வீடுகளில் இனி (தீபாவளியாகக்) கொண்டாடுவார்கள் என்று அறிவிக்கப்படும்.
இதைப் படித்து அந்தக் கூட்டத்தில் இருக்கும் அசுரர்களில் ஒருவனாக எனக்கு வெறுப்புத் தான் ஏற்பட்டது. இதுவே இந்தப் புத்தகத்திற்குக் கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன்.
மொழிபெயர்ப்பு நாகலட்சுமி சண்முகம்
இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் “நாகலட்சுமி சண்முகம்” என்பவரால் சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
புத்தகத்தின் 20% க்கு மேல் 50% க்குள் இராவணன் நம்மிடம் கூறுவதாக வரும் காட்சிகளில் சில வார்த்தைகள் திரும்பத் திரும்ப வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது.
இது மொழி மாற்றம் செய்வதால் ஏற்படும் வார்த்தை நெருக்கடியாக இருக்கலாம் ஆனால், பாதிக்கு மேல் இது போலத் தோன்றாமல் சீராகச் செல்கிறது.
இதற்கு இராவணன் தன்னைப் பற்றி விவரிப்பதாக வரும் காட்சிகள் குறைந்து மற்ற சம்பவங்கள் அதிகரித்தது காரணமாக இருக்க வேண்டும்.
புத்தகம் பெரியது என்பது பிரச்சனை இல்லை ஆனால், பெரிய பத்தியாக இடம் விடாமல் நெருக்கமாக இருப்பது படிக்கச் சிரமமாக இருக்கிறது. ஒரே புத்தகத்தில் அடக்க இது போலச் செய்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஆசிரியர் ஆனந்த் நீலகண்டன்
ஆசிரியர் ஆனந்த் நீலகண்டனுக்கு இது தான் முதல் புத்தகம் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
முதல் புத்தகத்திலேயே மிரட்டி இருக்கிறார். இவருடைய அடுத்தப் புத்தகம் “துரியோதனன்” படிக்க நினைத்துள்ளேன்.
என் மனதில் நினைத்ததைப் பகிர நினைத்தேன், அதோடு நம் எண்ணங்களில் தவறு இருந்தால், திருத்திக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை. இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்க வலியுறுத்துகிறேன்.
நிச்சயம் கொஞ்சமாவது உங்களை யோசிக்க வைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
இதைப் படித்ததும் புத்தகத்தை இணையத்தில் பதிவு செய்து என்னுடைய அக்காவிற்கு அனுப்பி வைத்தேன். முடிந்தவரை எனக்குத் தெரிந்தவர்களை எப்படியாவது இதைப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன்.
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது அவரவர் நடந்து கொள்ளும் செயல்களில் தான் இருக்கிறதே தவிர, அவர் பிறப்பில் கிடையாது. இதை நான் உறுதியாக நம்புகிறேன்.
சுதாகரன்