முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் கோயிலுக்குள் செல்லவிடாது தடுத்த தேரர்களின் எதிர்ப்பையும் மீறி மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
செம்மலை கிராம மக்களால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு மற்றும் அன்னதான நிகழ்வும் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆலயத்தினை ஆக்கிரமித்து பௌத்த விகாரையினை அமைத்துள்ள பௌத்த மதகுரு ஒருவரும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சிலரும் குறித்த பொங்கல் நிகழ்விற்குத் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
இதனையடுத்து இப்பிரதேசத்திற்கு வந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் பௌத்த மதகுருவிற்குச் சாதகமாகச் செயற்பட்டதுடன், ஒலிபெருக்கி பொன்ற சாதனங்களை பயன்படுத்தவும் தடை ஏற்படுத்தினார்கள்.
அத்துடன் அங்கிருந்த மக்களை புகைப்படம் எடுத்ததுடன், அங்கிருந்த ஊடகவியலாளர்களுடனும் முரண்பட்டனர்.
தெற்கில் இருந்து வந்த ‘இலங்கையினை பாதுகாப்போம்’ என்ற ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து செயற்படும் ஒரு பௌத்த அமைப்பினை சேர்ந்த 40ற்கும் மேற்பட்டவர்களே குறித்த நீராவியடிப்பிள்ளையார் ஆலயப்பகுதிக்கு சென்று குழப்பநிலையினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இப்பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராசா, சிவமோகன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் வட.மாகாணசபை விவசாய அமைச்சர் க.சிவனேசன், கரைத்துறைப்பற்று பிரதேசசபை தவிசாளர், பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.