உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரித்து வாக்களித்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களுடன் கூட்டணி அமைக்கும் முடிவை திமுக கைவிடுமா என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கு வது குறித்த விவகாரத்தில் பாமகவின் நிலைப்பாடு என்ன என்று திமுக உள்ளிட்ட சில கட்சிகளும், அமைப்புகளும் விவா தித்துக் கொண்டிருக்கின்றன. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தவறு. சமூக நிலையே சரியான அளவீடு என்றதலைப்பில் கடந்த 7-ம் தேதி கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டார். அதேநேரத்தில் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இரு ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
இந்த இடஒதுக்கீடு விவகாரம் குறித்த தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே ராமதாஸ், அன்புமணி இருவரும் பாமகவின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துவிட்ட நிலையில், பாமக கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறுபவர்களை எந்த வகையில் சேர்ப்பது என தெரியவில்லை. இடஒதுக்கீடு குறித்த மத்திய அமைச்சரவையின் அறிவிப்பு வெளியான ஜன. 7-ம் தேதிராமதாஸ், அன்புமணி ஆகியோரைதவிர வேறு யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. சமூகநீதிக்காக பொங்கும் ‘முரசொலி’ இதழை நடத்தும்திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின்கூட, அடுத்த நாள்தான் பேரவையில்இதுகுறித்து பேசினார்.
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்பதில் பாமக உறுதியாக உள்ளது. சமூக நீதித் தளத்தில் பாமகவுடன் சமமாக நிற்கும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை. உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரித்து வாக்களித்தன. சமூகநீதிக்கு எதிரான இந்தக் கட்சி களுடன் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் முடிவை திமுக கைவிடுமா என்பதை அக்கட்சித் தலைமை அறிவிக்க வேண்டும்.