எதிர்வரும் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இதில் இரண்டாவது தடவையாகவும் பதவியை தக்கவைத்துக்கொள்ள ஜனாதிபதி அஷ்ரஃப் கானி முயற்சிக்கின்றார். இந்நிலையில், குல்புதின் ஹெக்மட்யார் இத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அத்தோடு, ஆப்கானிஸ்தான் உட்துறை அமைச்சர் அம்ருல்லா சாலே தமது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
ஜனாதிபதி அஸ்ரஃப் கானியின் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக காபுலிலுள்ள ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதி ஜனாதிபதி பதவிக்கே அவர் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் சிறுபான்மை இனமான தஜிக் மக்களின் பலமான ஆதரவை பெற்றவரே அம்ருல்லா சாலே. முன்னாள் பாதுகாப்பு படையதிகாரியான அம்ருல்லா சாலேவை, கடந்த டிசம்பர் மாதம் உட்துறை அமைச்சராக ஜனாதிபதி கானி நியமித்தார்.
ஆப்கானிஸ்தான் தேர்தல் தற்போது உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. முன்னாள் பாதுகாப்பு உயரதிகாரிகள் பலர் ஜனாதிபதி அஷ்ரஃப் கானிக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஜூலை ஜனாதிபதி தேர்தல் கடுமையான போட்டி நிறைந்ததாக காணப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போரில் பெருமளவான படையினர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க துருப்புகளும் ஆப்கானிஸ்தானில் போராடி வருகின்றனர்.
இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமது துருப்புக்களில் அரைவாசிப் பகுதியினரை மீள பெற்றுக்கொள்ள ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் ஆலோசித்து வருகின்றது. ஆப்கானிஸ்தானில் தற்போது 14000 அமெரிக்க துருப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.