ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு நிரந்தர சுங்க ஒன்றியத்தில் நிலைத்திருப்பதற்கும் தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர் நலன்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கும் பிரதமர் உடன்பட்டால் தொழிற்கட்சி தெரேசா மே-யை ஆதரிக்குமென அக்கட்சியின் நிதிக் கொள்கைத் தலைவர் ஜோன் மெக்டோனல் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டை மீண்டும் ஐக்கியப்படுத்தி வேலைகளை பாதுகாத்து பொருளாதாரத்தை ஆதரிக்கும் ஒரு உடன்பாட்டை ஆதரிப்பதற்கு தொழிற்கட்சி தயாராக இருக்கிறது.
நாங்கள் எப்போதுமே இக்கொள்கையைத் தான் கொண்டுள்ளோம். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக பிரெக்ஸிற் தொடர்பாக பிரதமர் எம்மை தொடர்புகொள்ளவில்லை எனவும் அவர் கூறினார்.
ஆளும் கட்சியான கொன்சர்வேட்டிவ் கட்சியினுள் பிரெக்சிற் ஒப்பந்தம் காரணமாக ஏற்பட்டுள்ள பிளவின் விளைவாக பிரெக்ஸிற் குறித்த இறுதி முடிவில் தொழிற்கட்சி பெரும் செல்வாக்கை கொண்டுள்ளது.
எந்தவொரு பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கும் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு 256 தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலரின் ஆதரவை பிரதமர் பெறவேண்டியது அவசியமாகும்.