கொழும்பில், இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸ் விஜயத்தின்போது, அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் உள்நாட்டில் மட்டுமன்றி, சர்வதேசத்தின் கவனத்துக்கும் சென்றது.
குறிப்பாக, போதைப்பொருள் தொடர்பாக பிலிப்பைன்ஸ் எடுத்துள்ள கடுமையான நடவடிக்கையை இலங்கையிலும் எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
எனினும், போதைப்பொருள் தொடர்பில் நாட்டில் கடுமையான சட்டங்கள் இல்லை என்றே தெரிகிறது. போதைப்பொருள் கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டு, போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டாலும் அது முற்றாக ஒழிந்ததாக தெரியவில்லை.
ஜனாதிபதி, ஏற்கனவே போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு சிறைச்சாலையில் உள்ளவர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்றுவதாக கூறியிருந்தார். ஆனால்,இதுவரை அந்நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொள்ளவில்லை.
பிலிப்பைன்ஸ் போன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களை வீதியில் வைத்து கொலை செய்யாமல், ஏற்கனவே தெரிவித்ததுபோல போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி செய்வது சரியென, ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு சர்வதேச நாடுகளில் இருந்து விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன.
எனினும், சட்டரீதியாக நாம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும்போது இவ்வாறான விமர்சனங்கள் வராது என்றே நாம் நம்புகிறோம்.
இதற்காக, நாம் ஜனாதிபதிக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவும் தயாராகவே இருக்கிறோம். எனவே, போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் மரணதண்டனைப் பெற்ற கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என நாம் ஜனாதிபதிக்கு வலியுறுத்துகிறோம். இதற்கான திகதியை அவர் வெகுவிரைவில் அறிவிக்க வேண்டும்” என அஜித் பி. பெரேரா மேலும் குறிப்பிட்டார்.