அணுவாயுத பேச்சுவார்த்தைக்கு புத்துயிரளிப்பது தொடர்பான இடைக்கால ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் எதிர்பார்த்துள்ளன.
அதற்கான இரண்டாவது சந்திப்பு விரைவில் இடம்பெறவுள்ளது. அது தொடர்பான விடயங்களை கலந்துரையாடும் வகையில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அமெரிக்கா ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தலைமையில் எதிர்வரும் வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வடகொரியா சார்பில் சிரேஷ்ட அதிகாரி கிம் யோங் சோல் கலந்துகொள்ளவுள்ளார்.
இரு நாட்டு தலைவர்களினதும் இரண்டாவது சந்திப்பிற்கான இடம், நாள் என்பவற்றை இச்சந்திப்பின்போது இறுதிப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
உலகின் இரு துருங்களாக காணப்பட்ட வடகொரியா மற்றும் அமெரிக்காவின் தலைவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு கடந்த வருடம் ஜூன் மாதம் சிங்கப்பூரில் இடம்பெற்றது.
உலக அமைதிக்கு வழிவகுத்த குறித்த சந்திப்பின் பின்னர், அணுவாயுத சோதனையை கைவிடுவதாகவும், ஏவுகணை தளங்களை அழிப்பதாக|வும் வடகொரியா உறுதியளித்திருந்தது.
எனினும், அவை தொடர்பான 100 வீதம் உத்தரவாதம் கிடைக்கும்வரை பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ளப் போவதில்லையென அமெரிக்கா கூறியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியை விரைவில் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாக வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் புதுவருட உரையில் கூறியிருந்தார். இவ்வாறான பின்புலத்தில் இரு நாடுகளின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.