நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நல்லதே நடக்கும் என தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று (திங்கள்கிழமை) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
கோடநாடு விவகாரத்தில் முதல்வர், அமைச்சர்கள், சசிகலா குடும்பத்தினர் உள்ளிட்டோர் விசாரிக்கப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாரே?
அது காவல்துறை செய்ய வேண்டிய செயல். யாரிடமாவது ஆதாரம் இருந்தால் காவல்துறையிடம் கொடுக்கலாம்.
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை எந்த அளவில் உள்ளது?
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் உடனடியாக கூட்டணி குறித்துப் பேசி முடிவெடுக்கப்படும். அவசரம் வேண்டாம். நல்லதே நடக்கும்.
வரும் 18 ஆம் தேதி தமிழகம் வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை நீங்கள் சந்திப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா?
சந்திப்பது குறித்து எங்களுக்கு இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை.
அதிமுக-பாஜக கூட்டணி அமைக்கும் என சொல்லப்படுகிறதே?
அது யூகம் மட்டுமே. அதில் உண்மையில்லை.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் மோடியைச் சந்திப்பீர்களா?
மோடி வருகை குறித்தோ, சந்திப்பு குறித்தோ எனக்கு அதிகாரபூர்வமான தகவல் இல்லை.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.