தமிழ் மக்களுக்காக எனது உயிரையும் கொடுக்க தயாராக உள்ளேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
வாகரை வட்டவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழா மற்றும் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்!
மகிந்த அரசாங்கம் எங்களை அமைச்சு பதவிக்கு அழைத்த போதும், அற்பசொற்ப சலுகைகளை வழங்க முயற்சித்த போதும் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு நியாயத்திற்கும், நீதிக்கும், தர்மத்திற்கும், ஜனநாயகத்திற்குமாக பாடுபட்டோம். அதில் வெற்றியும் கண்டோம்.
தற்போது நாங்கள் எங்கள் மக்கள் மத்தியில் தலைநிமிர்ந்து செல்லக் கூடிய நிலையில் நிற்கின்றோம். எங்களது சகோதர பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாத்திரம் தான் தடுமாறி விழுந்தார். ஆனால் நாங்கள் விழவில்லை.
முன்பும் மகிந்த ஜனாதிபதியாக இருந்த போதும் என்னிடம் ஏழு தடவை வந்து பேசினார்கள். ஏன் கோடிக் கணக்கில் பேசினார்கள். அமைச்சு பதவிகளை தருகின்றோம் என்று பேசினார்கள். நாங்கள் செல்லவில்லை. எங்கள் மக்களின் அபிலாசைகளை தீர்க்கும் பாதையில் செல்வோம்.
எங்களது உயிரை தியாகம் செய்தாவது எங்களது மக்களுக்கு உழைப்போம். இதுதான் எங்களது கோட்பாடாக இருக்கி;ன்றது. அதனை அன்றும் கடைபிடித்தோம், இன்றும் கடைப்பிடிக்கின்றோம்.
உங்களது கிராமத்தில் காணப்படும் பிரச்சனைகளை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் நான் அதனை தீர்த்து தருகின்றேன்;. அத்தோடு மீனவர்களின் பிரச்சனைகளை தீர்த்து தருகின்றேன். உங்கள் பகுதியில் சுயதொழில் முயற்சிகளை வழங்குவதற்கு நான் தயாராக உள்ளேன் என்றார்.
வட்டவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தலைவர் ந.ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆலய பி;ரதம குரு சிவஸ்ரீ.சொ.ரதன் குருக்களினால் பூசைகள் என்பன இடம்பெற்றது.
இதன்போது சித்தி விநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலைகள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டதுடன், தங்களது பிரதேசத்தில் இடம்பெறும் குறைபாடுகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.
அந்தவகையில் பிரதேசத்தில் முக்கிய குறைபாடாக உள்ள குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் வாகரை பிரதேச செயலாளருடன் தொலைபேசியில் கலந்துரையாடி மக்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும் வட்டவான் பாடசாலை, அறநெறிப்பாடசாலை, ஆலயங்கள் என்பவற்றின் அபிவிருத்திக்கு உதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க எதிர்காலத்தில் வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் வாக்குறுதி வழங்கினார்.