பொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள்.
மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழும் நிகழ்வுகளில் பண்டிகைகள், சடங்குகள் என்பன முக்கியம் பெறுகின்றன. இவை காலம், இடம், சூழல், தேவை, நோக்கம் என்பவற்றினால் வேறுபாடடைகின்றது. மனிதவாழ்வு பண்பாட்டுக்குரியது என்பதால் உயிரியல் நிலையில் நிகழ்வுகள் பண்பாட்டு வயப்படுகின்றன. அந்தவகையில் தமிழர் சடங்குகள் சமூக, பொருளாதார, அரசியல், போரியல்,சமய, தளங்களைச் சார்ந்தும் அமைகின்றன. அந்தவகையில் தமிழர் பண்பாட்டின் உயிர்ப்பிற்கு உறுதியாய் இன்றுவரை தொடரும் பண்டிகைகளில் தைப்பொங்கல் முக்கிய இடம் வகிக்கின்றது.
தமிழரின் வாழ்வியற்தடத்தில் இன, மத பேதங்களைக்கடந்து தமிழன் என்ற உறுதிப்பாட்டில் ஒற்றுமையடையச் செய்வது பொங்கலே. இப்பொங்கல் பண்டிகையானது இந்து. கிறிஸ்தவ, முஸ்லிம்கள் என்ற வேறுபாடுகள் அற்று தமிழனின் பண்பாட்டியலின் உயிர்ப்பின் தைப்பொங்கல் உறுதியாகவே விளங்குகிறது. தமிழர்களின் வாசல்கள் தோறும் கோலம் போட்டு நிறைகுடம் வைத்து அந்த சூரிய தேவனுக்கு தன் நன்றிக்கடனினை செலுத்துகின்றார்கள்.
ஈழத்ததைப் பொறுத்தவரை 2009 .இற்கு முன்னர் தமிழர் உயிர்ப்பின் உயிர் நாடியாக இப்பொங்கல் விளங்கியது தாம் ஆலயங்களில், வீடுகளில், பொது இடங்களில், களமுனைகளில் என பொங்கிச் சூரியனுக்கு தன் நன்றிக்கடனைச் செலுத்துகின்றனர். களமுனைகளில் போராளிகள் தங்களை ஆயத தளபாடங்களை வைத்து சூரியனுக்கு பொங்கி நன்றிக்கடன் செலுத்துகின்றனர். ஈழத்தைப் பொறுத்தவரையில் ஈழத்தில் தமிழர் திருநாள் தனித்துவம் பெற்றது எனில் அது தமிழீழ விடுதலைப்புலிகளையே சாரும். மார்கழி மாத மழை இருளாலும், தை மாதப்பனியாலும் அல்லல்படும் மக்களுக்கு யானிருக்கிறேன் என நாற்றிசையும் தன் ஒளி பரப்பி கிளம்பும் சூரியனுக்கு நன்றிக்கடன் செய்கின்ற நாளாகவும் இது அமைகின்றது.
பொங்கலின் பின்னணி:-
தைப்பொங்கற் பண்டிகையின் பின்னணியை நோக்கில் நெல்லின் அறுவடை கண்ட மகிழ்ச்சியில் தம் உழைப்பிற்கு உதவி செய்து நின்ற அனைத்திற்கும் நன்றிக்கடன் செலுத்தும் ஆனந்தவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. இனி இந்தப் பொங்கற் பண்டிகை ஏன் தைமாதத்தில் மட்டும் கொண்டாடப்படுகின்றது என நோக்கில்
புவியின் காலநிலைத்தளத்தில் தென்னிந்தியாவும், ஈழமும் ஒரே புவியியல் சார் தன்மைகளுக்கு உட்படுவதால் இங்கே புரட்டாதி முதல் மார்கழி வரை மழைக்காலப்பகுதியாக விளங்குகின்றது. இதன்போது குளங்கள், நீர்நிலைகள் நிறைந்து பயிற்செய்கைக்கு ஏற்ற நீர்ப்பாசனத்தை வழங்குகின்றது. இதனால் விளைநிலங்கள் விளைச்சலுக்கு உள்ளாகி தை மாதத்தில் மழைக்காலம் முடிவடைய தை மாத்தில் அறுவடை செய்கின்றார்கள். இது பொங்கல் நிகழ்விற்குப் பொருத்தமாக அமைகின்றது.
அத்துடன் தமிழுக்கு அறநூலான திருக்குறள் தந்தவர் திருவள்ளுவர். ஆதலினால் திருவள்ளுவனி;ன் பெயரிலேயே தமிழர் ஆண்டும் ஆரம்பிக்கப்பட்டு திருவள்ளுவர் ஆண்டு தை மாதத்தை முதன்மையாகக் கொண்டு மார்கழி மாத்தில் முடிகின்றது. திருவள்ளுவர் காலம் கி.மு 31 என்கின்றனர் இதனாலேதான் எமது நாள்காட்டிகள் திருவள்ளுவர் ஆண்டு எனத் தொடங்குகின்றது. இது தொடங்குகின்ற நாளே தைப்பொங்கல் நாள். இதுவே தமிழனின் புத்தாண்டு தினம் என்கின்றனர்.
தமிழறிஞர்கள். வரலாற்றுக்காலங்களில் பொங்கல் வரலாற்றுக் காலங்களில் தைத்திருநாளான பொங்கலினை பழந்தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார்கள் என்பதற்கு வரலாற்றுக்காலங்கள் சான்றாதாரப்படுத்துகின்றன. சங்ககாலத்தில் பொங்கல் நாளை அறுவடை விழாவாகவே தமிழர்கள் கொண்டாடியிருக்கின்றனர். என்பதனை சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றின் 22ஆம் பாடல் விளக்கிறது.
‘அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல….’
என்று குறந்தோழியூர் கிழார் எனும் புலவர் அறுவடை விழாவை சாறு கண்ட களம் என வருணிக்கின்றார். அத்துடன் சங்ககால நூல்கள் பலவும் தைத்திருநாளை சிறப்பாக எடுத்தியம்பியிருக்கின்றன.
‘தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ (நற்றிணை)
‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ (குறந்தொகை)
‘தைஇத் திங்கள் தண்கயம் போல்’ (புறநானூறு)
‘தைஇத் திங்கள் தண்கயம் போது’ (ஐங்குறுநூறு)
‘தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ’ (கலித்தொகை)
எனப்பலவாறாக தைத்திருநாளின் சிறப்பியல்புகளை பழந்தமிழர் இலக்கியங்கள் தெளிவுபடுத்திக் காட்டுகின்றனர். இது தமிழர் திருநாளை பழந்தமிழன் எவ்வாறு சிறப்பாகக் கொண்டாடினான் என்பதனை எடுத்தியம்புகின்றன.
அடுத்து கிட்டத்தட்ட கி.பி 9ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்திலும் பொங்கல் பற்றி குறிப்பிடும் போது
‘மதுக்குலாம் அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்’
என பொங்கலினை குறிப்பிடுகின்றது.
மேலும் இந்தியா, ஈழம் ஆகிய நாடுகளை அடிமைப்படுத்தியிருந்த போத்துக்கீசர் பொங்கலின் சிறப்பினை தெளிவு படுத்தியிருக்கின்றனர். அதாவது கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவுக்கு வந்த அப்போடூபாய் எனும் போத்துக்கீச அறிஞர் தான் எழுதிய‘இந்துக்களின் பழக்க வழக்கங்களும், வாழ்க்கை முறைகளும் எனும் நூலிலே பொங்கல் உழவர்களின் அறுவடை நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
இவ்வாறாக தமிழர் திருநாளான பொங்கல் வரலாற்றுக்காலம் முதல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதனைக் காணலாம் தை மாதம் உத்தராயண புண்ணிய காலம் என்பர். அதாவது சூரியன் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வடதிசையில் சஞ்சரிக்கும் காலம் உத்தராயண காலம் எனவும், ஆவணி முதல் மார்கழி வரை தென் திசையில் சஞ்சரிக்கும் காலம் தெட்சிணாயணம் எனவும் வழங்கப்படும்.
பொங்கலன்று சூரியன் தென் திசையிலிருந்து வடதிசைக்குத் திரும்புவதாக ஒரு ஐதீகம். வான சாஸ்திரத்தின் படியும், சோதிட சாத்திரத்தின் படியும் சூரியன் இம்மாதத்தில் கும்ப லக்கணத்தில் இருந்து மகர லக்கணத்திற்கு வருவதாக்க கூறப்படுகின்றது. இதை மகர சங்கிராந்தி என்பர். இதுவே பொங்கல் தினமாகும். உத்தராயணத்தின் ஆரம்பம் என்கின்ற இந்த வேளையில் சூரியனுக்கு அர்ப்பணம் செய்து வணங்கும் மரபும் இணைந்திருப்பதனால் இத்தமிழர் பண்டிகை சைவ சமய ரீதியிலும் முக்கியம் பெறுகின்றது.
தமிழர் புத்தாண்டு மாற்றமடைவதற்கான காரணம்
இவ்வாறு சங்க காலத்தில் தை மாதத்திலேயே பொதுவாகப் புத்தாண்டு காலம் இருந்தாலும் அதன் பின்னர் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆரியப்பிராமணியங்களின் வருகையிலிருந்து பிராமணியங்களின் கலாச்சாரம் இந்தியாவில் அடிபரவ அது அப்படியே ஈழத்திலும் மாற்றமமையச் செய்திருந்தன. இந்திய வரலாற்றுக்காலங்களைப் புரட்டிப்பார்த்தால் தமிழகத்தை ஆட்சி செய்தவர்களில் குப்தர் காலமும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக விளங்குகின்றது.
அவ்வாறு ஆழப்பட்ட குப்தர் காலத்திலே 2ம்; சந்திரகுப்தன் என்பவன் தன்னுடைய பெயரினை வி;க்கிரமாதித்தன் எனும் பெயரில் மாற்றிக்கொண்டு ஆட்சி செய்தான். இவன் தன்னுடைய பெயரால் ‘விக்கிரம சகம்’ எனும் ஆண்டு முறைமையை அறிமுகப்படுத்தினான். இது சோதிடம், வானவியல், ஜாதகம் முதலியவற்றைப் புகுத்தி இவன் மேற்கொண்ட முயற்சியே இன்றைய சமய ஆண்டு முறைமையாகும். இந்த விக்கிரமாதித்தன் உருவாக்கிய விக்கிரமசகம் என்னும் ஆண்டு முறைமையானது சித்திரை முதல் பங்குனி வரையான ஆண்டுச்சழற்சியையும், பிரபவ முதல் அட்சய வரையான 60 ஆண்டுச் சக்கரத்தையும் வரையறுத்தது. இந்த பிரபவ முதல் அட்சய வரையான 60 ஆண்டுச் சுழற்சிகளில் எதுவுமே தமிழில் இல்லை.
இதுவே இன்று பிராமணியங்களினால் பின்பற்றப்படும் ஆண்டுமுறைமையாகும் இதன்பின்னரே பழந்தமிழன் தைமாதத்தில் கொண்டாடப்பட்ட புத்தாண்டானது சித்திரை மாதத்த்திற்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தினைச் செய்த பெருமை குப்தர்களையே சாரும் குறிப்பாக விக்கிரமாதித்தனை (சந்திரகுப்தன்) சாரும். இதனால் புத்தாண்டு தினம் மாற்றமடைந்திருந்தது. காரணம் பிராமணியங்களின் ஆதிக்கம் சைவ சமயத்தில் மேலோங்கியிருந்தது. இதனால் எமது தமிழ்ப்புத்தாண்டு மதம் சார்பானதாக அமையப்பெற்றது.
ஆகவேதான் மறைமலை அடிகள் உட்பட்ட தமிழறிஞர்கள் எமக்கு மத அடிப்படையில் இ;ல்லாது தமிழனின் புத்தாண்டாக அமையக்கூடியவாறு எமக்க ஒரு புத்தாண்டை அமைப்பதற்கு 1921ஆம் ஆண்டு மறைமலையடிகள் தலைமையில் நடந்த தமிழ் மாநாட்டில் சுவாமி ஞானப்பிரகாசர் உற்பட 500 அறிஞர்கள் கலந்துகொண்டு தமிழருக்கு தனியான புத்தாண்டு ஒன்றைக் கொண்டாடுவது குறித்து விவாதித்தனர். அதில் எல்லா மதங்களும் தமது மதங்களை வளர்த்தவர்கள் நினைவையே புத்தாண்டாக கொண்டாட தமிழர்கள் மட்டும் மதம் சார்ந்து கொண்டாட முடியாத நிலை காணப்பட்டது. ஏனெனில் தமிழர்களில் பலர் பின்பற்றுவது சைவத்தினை இதனால் இதன் தோற்றம் இன்னதென்று கூறமுடியாது.
ஆகவே தமிழின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தார்கள் அதில் தொல்காப்பியமே எமது ஆதிநூல் அதற்கு முன்பும் பலநூல்கள் தோற்றம் பெற்றாலும் அவை காலவெள்ளத்தால் அள்ளுண்டு போயின. எனவே தொல்காப்பியமே எமது ஆதிநூல். இதனை இயற்றியவர் பெயர் தெரியாமையால் இவரின் நினைவாகவும் புத்தாண்டு கொண்டாடமுடியாது. ஆகவே தமிழில் தெளிவாகத் தெரியக்கூடியதாக இருப்பது திருக்குறளை ஆக்கிய திருவள்ளுவரையே.
இவர் கி.மு.31இல் பிறந்தார் என்கின்றனர். இதில் குழப்பங்கள் இருக்கின்றன. திருவள்ளுவர் புத்தருக்கு முற்பட்டவர் என்கின்ற கருத்தும் நிலவுகிறது. ஏனெனில் அவர் காளி, விஷ்ணு பற்றித் தனது குறளில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் புத்தர் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. ஆகவே அவர் புத்தரிக் காலத்திற்கு முற்பட்டவர் என்கின்றனர். ஆனால் திருவள்ளுவர் பகவான் என்றழைப்பது புத்தரையே காரணம் திருவள்ளுவர் காலத்தில் விஷ்ணுவை பகவான் என்று அழைக்கப்படவில்லை. அத்துடன் தாமரை மலரோன் என்றழைப்பதும் புத்தரையே ஆகும். அந்தக்காலத்தின் பின்னர்தான் அது விஷ்ணுவுக்கும், இலக்குமிக்கும் வழங்கப்பட்டன.
எனவே கி.மு.31 ஐ திருவள்ளுவரின் ஆண்டாக உறுதிப்படுத்தி தை மாதம் முதல்நாளை புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என முடிவெடுத்தனர். இதன்போது கூறிய மறைமலையடிகள் ‘தைப்பொங்கலை சமயவிழா என்று சொல்லி சர்ச்சையைக்கிழப்பி குழப்பம் விளைவிக்க முயன்றாலும், தைமாதத்தை தமிழரின் புத்தாண்டு என ஏற்க முடியாது எனக்கூறுபவர்களும் இம்மாநாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கட்டளை விடுத்தார். அத்துடன் பொங்கல் சமயசார்பு அற்றவிழா. தைமாதமே தரணியாண்ட தமிழர்களின் புத்தாண்டாக மாறவேண்டும’; என மறைமலையடிகள் முழங்கினார். இதை தந்தை ஈ.வெ.ரா பெரியார்அவர்களும், சுவாமி ஞானப்பிரகாசரும் ஏற்றுக்கொண்டனர். தைப்பொங்கலே தமிழர் புத்தாண்டாக மாற்றம் பெற்றது.இவ்விதமே திருவள்ளுவர் ஆண்டு கணிக்கப்பட்டது. மாறாக இது கருணாநிதியின் கண்டுபிடிப்பன்று.
இனி இத்தனை சிறப்புக்கொண்ட தைப்பொங்கலை தமிழர் திருநாளாக மாற்றவேண்டும் தைப்பொங்கல் நாளே தனிப்பெரும் பண்டிகை என 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் வாழ்ந்த பேராசிரியர் நமசிவாய முதலியார் அவர்களே முதன்முதலாக பறைசாற்றியவராவார். இவருக்கு தமிழ்பேசும் நல்லுலகு என்றென்றும் நன்றியுடையதாகின்றது. இவர் தமிழகத்தின் கடற்கரை மீன்பிடிக்கிராமங்களில் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட வழிவகுத்தவர். அதனைத் தொடர்ந்து பாவேந்தர் பாரதி தாசன் அவர்கள்
‘நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு.
தரணியாண்ட தமிழர்க்கு தை முதல்
நாளேதமிழ்ப்புத்தாண்டு’
என்றும்
‘பத்தன்று நூறன்று பன்னூறன்று
பல்லாயிரத்தாண்டாய்
தமிழர் வாழ்வின் புத்தாண்டு தை
மாதம் முதல் நாள் பொங்கல் நன்நாள்’
என்றார்.
இவ்வாறு தமிழறிஞர்கள் என்னதான் காத்தினாலும் நாம் கேட்டபாடு இல்லை சரி அதைவிட்டு விடையத்திற்கு வருவோம்.
தமிழக – ஈழப்பண்பாட்டுப்பரவலிடையே தமிழகப்பண்பாட்டு மரபுகள் ஈழத்தில் பரவியிருந்த போதும் சில அம்சங்கள் இச்சமூக குழுமங்களுக்கு ஏற்றவாறு வடிவம் பெற்றும் மாற்றமடைந்தும் காணப்படுகின்றது. தமிழகத்தில் நிலவும் சில வழமைகள் எமது ஈழப்பகுதியில் காணமுடிவதில்லை. ஈழத்தில் தைப்பொங்கல் என்னும் சொல் ஒரு தனித்துவ வழக்காறாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் தைப்பொங்கலின் முதன்நாள் போகிப்பண்டிகை என்ற பெயரில் பழைய பொருட்களை தீயிட்டுக் கொழுத்தி, பீடைகளை அகற்றி கொண்டாடுகின்றார்கள். இந்நிகழ்வு ஈழத்தில் இல்லை என்றே கூறலாம். தமிழகத்திலும்; அந்நிகழ்வு காலமாற்றத்தினால் மாறி பழைய பொருட்களுக்குப் பதிலாக ரயர்களைப் போட்டுக்கொழுத்தி இந்நிகழ்வினைக் கொண்டாடுவார்கள்.
மாட்டுப்பொங்கல்
பொங்கலிற்கு மறுநாள் மாட்டுப்பொங்கல். அன்று உழவர் தொழிலுக்கு முக்கியமாகக் கருதப்படும் மாடுகளை நீராட்டி அலங்கரித்து வழிபாடாற்றல் இந்நிகழ்வின் மரபு. உழவனே உலகிற்கு உயிர் கொடுப்பவன் அவன் இன்றேல் அவனியே இல்லை எனச் சொல்வார்கள். இதை கம்பன் கூட தனது ஏரெழுபது என்னும் நூலில்
‘மேழிபிடிக்கும் கைவேல் வேந்தர்க்கு நோக்குங் கை….’
என்று பாடுகிறான். ‘ஏன்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’
என்று வள்ளுவனும்
, ‘வரப்புயர நீருயரும்’
என்று ஒளவையும்,
உழவுத் தொழிலுக்கும் வந்தணை செய்வோம்
என பாரதியாரும் போற்றியிருக்கின்றனர்.
அப்படிப்பட்ட சிறப்புக்கள் மிக்க உழவர் திருநாளாகிய மாட்டுப்பொங்கல் சமூக மாற்றத்தின் நடுவே வெறும் சடங்காக மட்டுமே இந்நிகழ்வு நடாத்தப்படுகின்றது. இது காலமாற்றத்தின் தன்மையே. வயல்களில் நவீன உழவு இயந்திரங்களின் வருகையும் நீர் இறைக்கும் இயந்திரங்களின் பண்பாடுகளின் நுழைவாலும், தம் பணியிழந்த கால்நடைகளுக்கு வெறும் சடங்காக மட்டுமே இந்நிகழ்வு நடைபெறுகின்றது.
அத்துடன் தமிழர் பண்பாட்டின் வெளிப்பாடாய் மட்டுமன்றி தமிழர் பண்பாட்டின் விழுமியங்களை நிலை பெறச் செய்யவும் தமிழகத்தில் பொங்கலன்று நிகழும் ஜல்லிக்கட்டு நிகழ்வு முக்கிய இடம் பெறுகிறது. இது சங்ககாலத்தில் நடைபெற்ற காளையை அடக்கும் ஏறு தழுவுதலின் தொடர்ச்சியாகவே நடைபெறுகின்றது. இதுசங்ககாலத்தில் நடைபெற்ற ஏறதழுவுதலின் பண்பாட்டினைக் கொண்டிருக்காவிட்டாலும் தமிழர் பண்பாட்டினை தொடர்ந்தும் உயிர் பெறச் செய்கின்றது. ஆனால் இது ஈழத்தில் வண்டிற்சவாரிகளாக நடைபெறுகின்றன. வன்னியில் உருத்திரபுரம், வட்டக்கச்சி, விசுவமடு, வவுனிக்குளம் ஆகிய விளையாட்டு மைதானங்கள் இந்நாளில் களைகட்டும். நன்றாகச் சவாரி செய்யக்கூடிய மாடுகளை பந்தையப்படுத்தி வண்டியிற் பூட்டி சவாரி செய்வார்கள். இது கால மாற்றத்திற்கு ஏற்ப தமிழர் பண்பாடு ஈழத்தில் நடைபெறுவதனைக் காட்டுகின்றது.
கணுப்பொங்கல்
இந்த பொங்கலின் தொடர்ச்சியாக தமிழகத்தில் நடைபெறும் கணுப்பண்டிகை. ஈழத்தில் இல்லை. இது பெண்க
ளுக்கான விஷேசமான தினமாகும். பொங்கற் பானையில் கட்டிய மஞ்சளினை எடுத்து பெரியவர்களிடம் கொடுத்து நெற்றி மற்றும் தாலியில் மூன்று தடவை ஒற்றிக்கொள்வர். பெரியவர்கள் இல்லாவிடத்தில் கணவனிடம் கொடுத்து ஒற்றிக்கொள்வர். இதன்போது பெண்களுக்கு பிறந்தவீட்டுச்சீதணம் என்று அனுப்புவதும் இந்நாளில் வழமையானது. பிறந்தவீடு செழிக்கவேண்டும் என்று தமிழகத்தில் இப்பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இது சங்ககாலத்தில் தை நீராடல் என அழைக்கப்பட்டது. இதனைப் பரிபாடல் 11 பாடல் குறிப்பிடும் போது
‘வையை நினைக்கு மடை வாய்த்தன்று
மையாடல் ஆடன் மழப்புலவர் மாறெழுந்து
பொய்யாடலாடும் புணர்ப்பி ரைவர்
தீயெரிப் பாலுஞ் செறிந்த முன் பூற்றியோ
தாயருகா நின்று தவத் தைந்நீராடல்
நீயுரைத்தி வையை நதி’
மணமாகாத கன்னிப்பெண்கள் தாய்மார் அருகில் நின்று வைகையில் தைந்நீராடி சிறந்த கணவனைப் பெற வேண்டுமென பழந்தமிழர் வேண்டி சிறப்பாக இப்பொங்கல் நாளைக் கொண்டாடினர்.
ஈழத்தமிழர்களிடையே போகிப்பண்டிகை, கணுப்பண்டிகை ஆகியன இல்லை. காரணம் ஈழத்தில் ஒரு தனித்துவமான ஆரியக்கலப்புக்கள் பெரிதும் இல்லாத ஒரு இனக்குழுமம் வாழ்ந்தமையைச் சொல்லலாம். இதனால் ஆரியப்பிராமணியங்களின் கலாச்சாரச்சடங்குகளான இவையிரண்டும் ஈழத்தில் இல்லை. ஆனால் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் என்பன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் காலங்காலமான நம்பிக்கை. இதனால் தான் இது தமிழர்களின் மத்தியில் ஒரு உறுதியை புத்துணர்ச்சியை வளர்க்கும்.
போரின் விளைவால் புலம்பெயர்ந்து சிதறிச் சிக்கல்தன்மை வாய்ந்து அலைகின்ற சமூகமாக ஈழத்தமிழ்ச்சமூகம் இருந்தாலும் தாம் வாழும் இடங்களில் அதாவது அகதி முகாம்களிலும், வீடிழந்து தற்காலிக குடிசைகளில் வசித்தாலும், தம்மிடையே நீளும் பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் தைப்பொங்கற் பண்டிகையை கொண்டாடுகின்றார்கள்.
பல குடும்பங்களில் துயரப்பொங்கலாக வரும் ஒவ்வொரு பொங்கலையும் அவர்கள் கொண்டாடுகின்றார்கள். ஏனெனில் தமிழை, தமிழர் பண்பாட்டினை ஆழமாக, ஆத்வாசமாக நேசித்த இனம் பூண்டோடு அழிக்கப்பட்டதனால் தம் குடும்பத்தலைவர்களை, உறவினர்களை இழந்தவர்கள் இப்பொங்கலை துயரப்பொங்கலாக கண்ணீர் பொங்கலாக தமிழர் பண்பாட்டில் பதிவு செய்கின்றார்கள்.
காலங்காலமாக, கூட்டாய், ஒற்றுமையாய் கொண்டாடிய பொங்கல் இன்று உறவுகளைப் பறிகொடுத்து, அங்கத்தவர்கள் இல்லா பொங்கலாய், முற்றங்கள் இல்லாத பொங்கலாய், வாழ்வின் ஆதாரமான உழைப்புக்களை, வருமானத்தினை எட்டமுடியாத பொங்கலாய், தமது தேசங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாது பிறர் முற்றங்களில் பொங்கும் பொங்கலாய், பலர் வாய்விட்டு தமது சோகங்களை சொல்லத்தயங்கும் பொங்கலாக கடந்த 2009 இற்கு பின் வருகின்ற பொங்கல் இடம்பெறுகின்றது இது தமிழர் பண்பாட்டில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.
மாற்றத்திற்கு உற்படாத சமூகம் இல்லை என்கின்ற இயற்பியல் விதிக்கமைய எமது ஈழத்தமிழர் சமூக வாழ்வும் மாறியிருக்கிறது.
அத்தோடு புலம்பெயர் வாழ்வில் மக்களிடையே பொங்கல் அவ்வவ் நாடு
களின் தன்மைகளுக்கு ஏற்ப்ப வீட்டிற்குள்ளே அமைகின்றது. பெரும்பாலான மக்கள் ஆலயங்களுக்குச் சென்று தம் பொங்கற் பண்டிகையை கொண்டாடுகின்றார்கள். அத்துடன் ஈழத்தில் கூட முற்றத்தில் கோலமிட்டு பொங்குகின்ற நிகழ்வும் தொடர் மாடிக்கட்டங்களில் வசிப்போரிடம் இல்லை எனலாம்.
எது எவ்வாறாக இருந்தாலும் தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாளையே தமிழ்ப் புத்தாண்டு தினமாக, தமிழ்ப்பாரம்பரிய தினமாக பழந்தமிழன் கொண்டாடினான். எனவே தமிழர் சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் தமிழர் பண்பாட்டின் உயிர்ப்பின் உறுதியாய் பொங்கல் நிகழ்வு அமைகிறது.
அ.மயூரன்