மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் எமது மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக்கூறி போலி வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அரசாங்கங்களுக்கு சேவகம் செய்வதாகவும் அவர் குற்றஞ்சுமத்தினார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் அங்குரார்ப்பண மத்திய குழுக் கூட்டம், யாழ்ப்பாணத்தில் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் கூட்டணியை தொடங்கியுள்ளோம். ஒருபுறம் எமது மக்கள் கடந்த 30 வருட கால போர்த் தாக்கங்களில் இருந்து இன்னமும் மீண்டுவரமுடியாத நிலையில் இருக்கின்றார்கள்.
மறுபுறத்தில் ஏற்கனவே காணப்படும் கட்சிகள் எமது மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிப் போலி வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அரசாங்கங்களுக்கு சேவகம் செய்து பதவிகளையும் சலுகைகளையும் பெறுவதை இலக்காகக்கொண்டு செயற்பட்டுவருகின்றார்கள்.
இதனால் மக்கள் ஏமாற்றமும் சலிப்பும் அடைந்திருக்கின்றார்கள். இவ்வாறான ஒரு சூழலிலேயே எமது கட்சி ஒரு சிறு குழந்தையாகப் பிரசவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழந்தை விரைவாக எழுந்து நடந்து எம்மக்களின் வேலாகி பாதுகாப்புக் கவசமாகவும் அவர்களின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் சக்தியாகவும் பரிணாமம் பெறுவது அவசியமாக இருக்கின்றது.
இன்று முதல் அனைவரும் அர்ப்பணிப்புடனும் துடிப்புடனும் எமது மக்களின் துயரங்களை நீக்குவதற்கும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கட்சியில் ஓடாக நின்று பணியாற்ற வேண்டும்.
எமது கட்சி மக்களால் வலுப்படுத்தப்பட்ட ஒரு கட்சியாகவும் அடிமட்ட மக்களின் ஆதரவில் தங்கியுள்ள கட்சியாகவும் கட்டியெழுப்பப்படுவதிலேயே எமது வெற்றி தங்கி இருக்கிறது. எமது மக்கள் தான் இந்தக் கட்சியை வழிநடத்திச்செல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.