ஜஸ்ரின் ட்ரூடோ பொறுப்பற்ற வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவித்து சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கனேடியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமையானது சீனாவின் தன்னிச்சையான செயற்பாடு எனத் தெரிவித்து கனேடிய பிரதமர் சீனாவை குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், அத்தகைய பொறுப்பற்ற கருத்துகளை வெளியிடுவதை நிறுத்துமாறு சீன வெளியுறவுத்துறை அமைச்சர், கனேடிய பிரதமருக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், சீனாவின் நீதி, இறைமைக்கு மதிப்பளிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். அத்தகைய கருத்துகளை முன்வைப்பதற்கு முன்னர் சீனாவின் சட்டங்களை அறிந்துக் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
222 கிலோகிராம் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கனேடியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு கடந்த நொவம்பர் மாதம் அவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அவருக்கான தண்டனை மரண தண்டணையாக அதிகரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பானது ஏற்கனவே பாதிப்படைந்திருந்த சீன- கனேடிய உறவை மேலும் மோசமடையச் செய்துள்ளது.
ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே கடந்த டிசம்பர் மாதம் முதல் முரண்பாடுகள் தோன்றியுள்ளன.