பெய்ஜிங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹூவா சுன்யிங் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அத்தோடு, மெங் வான்சூவை கனடா உடன் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான சீனாவின் ஹூவாவி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாகி மெங் வான்சூ, கனடாவில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி கைதுசெய்யப்பட்டு தற்போது கண்காணிப்பின் கீழான பிணையில் உள்ளார்.
அமெரிக்காவின் தடையை மீறி ஈரானுக்கு தொலைத்தொடர்பு கருவிகளை வழங்கியதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்தும் வாய்ப்புள்ளதென தெரிவிக்கப்படும் நிலையில், சீனா தொடர்ச்சியாக கண்டனம் வெளியிட்டு வருகின்றது.
இதேவேளை, ஹூவாவி அதிகாரி கனடாவில் கைதுசெய்யப்பட்டதன் பின்னர், கனேடிய முன்னாள் இராஜதந்திரி ஒருவரும் வர்த்தக ஆலோசகர் ஒருவரும் சீனாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கனேடியர் ஒருவருக்கு சீனாவில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்விடயங்கள் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.