புதிய அரசியலமைப்பு குறித்து நேற்று
(சனிக்கிழமை) கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார்.
புதிய அரசியலமைப்பு அமைக்கும் பணியை ஆரம்பித்தபோது ஜனாதிபதி முறை ஒழிப்பு, தேர்தல் முறை மாற்றம் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய மூன்று பிரதான இலக்குகளை தீர்மானித்தபோதும், காலப்போக்கில், அரசியல் தீர்வை தள்ளிவைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
புதிய அரசியலமைப்புக்கு எதிராக மஹிந்த அணியில் திட்டமிட்ட இனவாத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதுடன், ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ளேயும் எதிர்ப்பு வலுப்பதாகவும் தெரிவித்த அவர், இப்போது புதிய அரசியலமைப்பு வரும் சாத்தியம் அருகிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதை ஊகித்தே பல வருடங்களுக்கு முன்னரே புதிய அரசியல் யாப்பில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காது என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே உரிமைகளுக்காக தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஓரணியில் நிற்கவேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமக்கு உரியதை கேட்டுப் பெறுவதற்கு நாம் ஒருமித்து பேச வேண்டும் என்று கூறினார்.
இதை உணர்ந்து செயற்படத் தயாராகும் கட்சிகளுடன் சேர்ந்து செயற்பட தமிழ் முற்போக்குக் கூட்டணி தயார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.