அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாநிலத்தின் நியூவார்க் நகரிலிருந்து ஹொங் கொங்கிற்கு விமானம் ஒன்று கடந்த சனிக்கிழமை புறப்பட்டது. எனினும் நடுவானில் பயணி ஒருவருக்கு அவசரமாக மருத்துவ உதவி தேவைப்பட்டதால், விமானம் கனடாவின் கிழக்குப் பகுதியிலுள்ள கூஸ் பே (Goose Bay) விமான நிலையத்தில் தரையிறங்கியது.
மருத்துவ உதவியாளர்கள், பயணியை விமானத்திலிருந்து வெளியேற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும் அதன்பின்னரும் விமானத்தினால் அங்கிருந்து புறப்பட்டு செல்ல முடியவில்லை.
கூஸ் பேயின் தட்பநிலை பூஜ்யத்துக்குக் கீழ் -30 டிகிரி செல்சியஸாக இருந்ததால் விமானத்தின் கதவுகளில் ஒன்று உறைந்து போனமை காரணமாகவே இந்த சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தது.
இரவு நேரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பணியில் இல்லாததால் பயணிகள் விமானத்திலிருந்து இறங்க அனுமதிக்கப்படவில்லை. குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள விமானத்தில் பணிபுரியும் ஊழியர்களினால் வழங்கப்பட்ட இலேசான போர்வைகள் போதுமானவையாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தில் 10 மணி நேரத்திற்கு மேல் காத்துக்கொண்டிருந்த பயணிகளுக்குச் சாப்பாடும் தண்ணீரும் குறைந்துகொண்டே வந்ததால், அவர்கள் ஆத்திரமடைந்ததாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) காலை மாற்று விமானம் ஒன்று கனடாவின் கூஸ் பேயை சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து மாற்று விமானத்திற்குப் பயணிகள் மாற்றப்பட்டனர். கூஸ் பேயிலிருந்து புறப்பட்ட விமானம், பின்னர் நியூயோர்க்கைச் சென்றடைந்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.