கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க வலியுறுத்தி ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிப் போராட்டம் திருச்சியில் நேற்று (டிசம்பர் 4) நடந்தது. அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, "தமிழகத்தைப் பற்றி மோடிக்கும், பாஜகவுக்கும் அக்கறை இல்லை. காரணம் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் ஓரவஞ்சனையுடன் பாஜக செயல்படுகிறது.
தமிழகம் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை. எந்த முகத்தை வைத்துக்கொண்டு இங்கு தாமரை மலரும்? தமிழகத்தில் தண்ணீர் இல்லை. புல்கூட முளைக்காத சூழலில் தாமரை மலர்ந்துவிடுமா? புல்லுக்கே வக்கில்லை தாமரை மலர்ந்திடுமாம்'' எனக் குறிப்பிட்டார்.
இவருடைய பேச்சைக் குறிப்பிட்டு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் “இனி மழைக்காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும். குளம் நிறையும். தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரையை மலரச் செய்வோம். காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் தமிழிசை.
தமிழிசையின் ட்வீட்டுக்கு பதிலடியாக, அவரது ட்வீட்டைக் குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் “சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்!” என்று தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலினின் ட்வீட் வைரலாகப் பரவியது. அவருக்கு பதிலளிக்கும் வகையில் போடப்பட்ட சில ட்வீட்களை ரீ-ட்வீட் செய்து வந்தார் தமிழிசை. அதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலினின் ட்வீட்டைக் குறிப்பிட்டு “அதிகாலையில் சூரியன் உதிப்பதற்குள் இதழ் விரித்து தாமரை மலர்கிறது. இது அன்றாட நிகழ்வு ..மேக மூட்டத்தில் சூரியன் மறைந்தாலும் தாமரை மலரும். சூரிய சக்தி செடியில் இருக்கும் மலரைக் கருகச்செய்யும். குளத்து நீரில் மிதக்கும் தாமரையை கருகச் செய்யாது, கருகச் செய்யவும் முடியாது. இது இயற்கை நியதி” என்று தெரிவிதுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.
ட்விட்டர் தளத்தில் தமிழக அரசியலின் இரு முக்கிய தலைவர்கள் நேரடியாக ட்வீட் போரில் ஈடுபட்டதால், சிறு பரபரப்பு நிலவியது.