ஆர்ஜென்டீனாவில் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள் கீழே:
உலக வர்த்தக அமைப்பு
உலக வர்த்தக அமைப்பின் (WTO) சீர்திருத்தத்திற்காக அனைத்து G20 தலைவர்களும் அழைப்பு விடுத்தனர். அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் ஜப்பான், ஒசாகாவில் நடைபெறவுள்ள இவ்வமைப்பின் மாநாட்டின்போது இவ்விடயம் குறித்து கலந்துரையாடப்படும்.
எவ்வாறிருப்பினும் அமெரிக்காவின் எதிர்ப்பு காரணமாக கூட்டிணைவு இறுதி அறிக்கையில் பாதுகாப்புவாதம் குறிப்பிடபடவில்லையென பேச்சுவார்த்தையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக வர்த்தகஅமைப்பை விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை இலக்காக கொண்டு ஆக்கிரமிப்பு வர்த்தக கொள்கைகளை ஏற்றுக்கொண்டார்.
அமெரிக்க-சீன வர்த்தக யுத்தம்
அமெரிக்க ஜனாதிபதியும் சீன ஜனாதிபதியும் தமது வர்த்தக யுத்தத்தை 90 நாட்கள் நிறுத்திவைப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஜனவரி முதலாம் திகதி முதல் சீனப்பொருட்களின்மீது 200 பில்லியன் டொலர்கள் கட்டணத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை நிறுத்துவதற்கு டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டார்.
சவுதி அரேபிய இளவரசர்
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலை குறித்து பிரித்தானிய பிரதமர் தெரசா மே, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உட்பட பல உலக நாடுகளின் தலைவர்களும் சவுதி அரேபிய இளவரசர் மொஹம்மட் பின் சல்மானுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மாத்திரமே உத்தியோகபூர்வ விவாதத்தின்போது இவ்விடயம் குறித்து பேசியதாகவும் சவுதி இளவரசர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் துருக்கி ஜனாதிபதி தெரிவித்தார்.
ரஷ்யா – உக்ரேன் மோதல்
உக்ரேனிய கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியமை தொடர்பாக மேற்கத்திய நாட்டுத் தலைவர்கள் ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புட்டினை கண்டனம் தெரிவித்தபோதிலும் மோதலை முடிவுக்குக்கொண்டுவரும் நிலை ஏற்படுத்தப்படவில்லை.
ரஷ்யாவின் செயல்களைக் கண்டித்து உச்சிமாநாட்டின்போது, புட்டினுடன் திட்டமிடப்பட்ட கூட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ரத்துச்செய்தார்.
ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் டொனால்ட் ரஸ்க், உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கடுமையாக விமர்சித்தார்.
காலநிலை மாற்றம்
அமெரிக்காவைத் தவிர ஏனைய 19 நாடுகளும் 2015 ஆம் ஆண்டு பரிஸ் உடன்பாட்டிற்கு தமது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தின.
வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்
இரண்டுவருட பேச்சுவார்த்தைகளின் பின்னர் கனடா மற்றும் மெக்சிக்கோ தலைவர்களுடன் திருத்தப்பட்ட வடஅமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்டார்.