கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் உள்பட தமிழகத்திலும் இன்று முதல் 6-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று பதிவிட்டு இருப்பதாவது:
சென்னையில் மழை எப்போது?
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று இரவு முதல் 5-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும். இந்த மழை இடைவெளி விட்டுப் பெய்யக்கூடும்.
டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று மாலை முதல் மழை தொடங்கி விடும். இந்த மழை 4-ம் வரை பெய்யக்கூடும். சென்னை, புதுச்சேரி மற்றும் கடலூர் மண்டலங்களில் இரவில் இருந்தோ அல்லது அதிகாலை முதலோ மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் அதாவது, 5-ம் தேதி கடற்கரை மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.
6-ம் தேதி முதல் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான நீலகிரி மாவட்டம், உள் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யக்கூடும்.
கனமழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்:
இந்த மழையால், திருவள்ளூர் மாவட்டம், நெல்லூர், சித்தூர், தென் சென்னை பகுதிகளான காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் 5 மற்றும் 6-ம் தேதிகளில் கன மழை பெய்யும். தென் மாவட்டங்களான திருநெல்வேலி அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகள், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
ஏன் ஏரிகளில் நீர் மட்டம் உயரவில்லை?
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் மழை பெய்தும் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை என்பது முக்கியக் காரணம் ஒவ்வொரு மழைக்கும் இடையே நீண்ட இடைவெளி இருந்ததுதான். அதாவது அக்டோபர் முதல் வாரத்தில் 110 மி.மீ. மழை 3 நாட்களில் பெய்தது. அதன்பின் 25 நாட்களுக்குப் பின் அந்த மாதத்தின் கடைசியில் மழை பெய்தது. அப்போது, 3 நாட்களில் 80 மி.மீ. மழை பெய்தது. பின் 20 நாட்கள் இடைவெளியில் நவம்பர் 4-வது வாரத்தில் மழை பெய்தது. 2 நாட்களில் 140 மி.மீ. மழை பதிவானது. அதன்பின் தற்போது 15 நாட்கள் இடைவெளியில் இன்று இரவு முதல் மழை பெய்ய உள்ளது.
ஏறக்குறைய சராசரியாக 15 நாட்கள் இடைவெளி விட்டுமழை பெய்யும் போது, பூமியில் இருந்து நீர்ஊரும் திறன், நீரைத் தக்கவைத்துக்கொள்ளும் திறன் குறைந்துவிடும். இதனால் எதிர்பார்த்த அளவுக்கு ஏரியில் நீர்மட்டம் உயரவில்லை''.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.