ஓராண்டு பணி நீடிப்பு செய்து உத்தரவிட்டிருக்கின்றது நீதிமன்றம்
1980-களில்தமிழகத்தில் சிலைகள் கடத்தல் அதிகரித்திருந்த நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இதன் பிறகு வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் சிலைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. அப்போதுதான், சர்வதேச சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர், சிலைக் கடத்தல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டான். தஞ்சாவூர் பெரியகோயிலில் இருந்து காணாமல்போன ராஜராஜன் சிலையை மீட்டுக்கொண்டுவந்தது பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸ் குழு. இதுபோலவே, கடந்த ஓராண்டு மட்டும் முப்பதுக்கும் அதிகமான சிலைகளை மீட்டிருக்கிறது இந்தக்குழு. மேலும், தீனதயாளன், சேகர் உள்ளிட்ட சிலைகளை விற்கும் புரோக்கர்களையும் கைது செய்தனர். மேலும், போலிச் சான்றிதழ்கள் மூலம் சிலைகளை வைத்திருந்ததாகக்கூறி அமித்திஸ்ட் உணவக உரிமையாளர் கிரண்ராவ் மற்றும் தொழிலதிபர் ரன்வீர்ஷா ஆகியோர் வீட்டில் இருந்து 300-க்கும் அதிகமான சிலைகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில்தான், கடந்த ஆகஸ்ட் மாதம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரித்து வந்த வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. இந்த உத்தரவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என, யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெறவிருந்த நிலையில், அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து, பொன்.மாணிக்கவேலை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு நியமித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.