எதிர்வரும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை தொடர்பான விடயங்களை உள்ளடக்கி அதன் மூலம் அழுத்தம் கொடுக்கப் போவதாக பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.
தமது கட்சியான தொழிற்கட்சியின் கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் நலன்சார் விடங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், அடுத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை விடயத்தை உள்ளடக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் ஹைட் பார்க் மைதானத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில், பிரத்தானியாவின் அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர். இதன்போதே ஜெரமி கோர்பின் மேற்குறித்த விடயத்தை தெரிவித்தார்.
மனிதஉரிமையை மீறும் நாடுகள் தொடர்பில் மனிதஉரிமைப் பேரவை காத்திரமான நடவடிக்கையை எடுப்பது அவசியமென தெரிவித்த அவர், அவ்வாறான நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளையும் விதிக்கவேண்டுமென வலியுறுத்தினார். அத்தோடு, ஆயுத ஏற்றுமதியையும் நிறுத்தவேண்டும் என்றும் அதுவே தமது கட்சியின் வெளியுறவுக் கொள்கையாகும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், உலகலாவிய நியாயாதிக்கத்தினைப் பயன்படுத்தி பிரித்தானியாவில் வசிக்கும் அல்லது விஜயம்செய்யும் யுத்தக் குற்றத்தோடு தொடர்புடைய இலங்கை அதிகாரிகளை கைதுசெய்யும் ஆணையை பிறப்பிக்க வேண்டுமென கெம்பக் அமைப்பின் பிரதிநியான லெஸ் லெவிடோவ் கோரிக்கை விடுத்தார்.
மேலும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல், மீண்டும் வழங்கப்பட்ட ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நிறுத்துதல், சர்வதேச நீதிவிசாரணை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.