அகரம் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 136 ஆவது பிறந்தநாள் நினைவு தின நிகழ்வு கல்முனையில் நடைபெற்றது. ஓய்வு நிலை அதிபர் அகரம் ஆலோசகர் இ.இராஜரெத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஈழத்தின் மூத்தகவிஞர் மு.சடாட்சரன் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக கல்முனை தமிழ்ப்பிரிவு கலாசார உத்தியோகஸ்தர் த.பிரபாகரன் உட்பட கவிஞர்கள், கலைஞர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர். அகரம் தலைவர் செ.துஜியந்தனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் மகாகவி பாரதியின் படத்திற்கு கவிஞர் மு.சடாட்சரன் மலர்மாலை அணிவித்தார். தமிழ்த்தாய் வாழத்துடன் பாரதியார் பற்றிய கருத்துரைகள் பகிரப்பட்டன.
அங்கு உரையாற்றிய பிரதம அதிதி மூத்தகவிஞர் மு.சடாட்சரன் தெரிவிக்கையில்..
பாரதி ஒரு புதுயுகத்தை அமைத்த மகாகவி தமிழில் நவீன கவிதைப்போக்கை முதலில் வித்திட்டவர் பாரதி என்றே கூறவேண்டும். தற்போது நாலைந்து தலைமுறைகள் தோன்றி எழில் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.
இந்தப் பாரதி என்ன செய்தார் என்று நோக்கினால் நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப் பொழுதும் சோராதிருத்தல் உமைக்கினிய மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான் சிந்தையே இம் மூன்றும் செய்! என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு தமிழ்க்கவிதை, தமிழ் இலக்கிய உலகை புத்தெழுச்சியோடு வளரச் செய்துள்ளார் பாரதி.
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி அமைப்போம் என்று இலங்கைத் தமிழர்களையும் நினைத்து ஏங்கியவர் அவர்.
நெஞ்சுபொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் அது பெரிதாமோ? ஐந்து தலைப்பாம்பென்பான் அப்பன், ஆறுதலை என்று மகன் சொல்லி விட்டால் நெஞ்சு பிரிந்திடுவார், பின்பு நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்! இந்த நிலை இன்னும் நமது இலக்கிய உலகில் இருந்து வருகிறது.
வலிமையற்ற தோளினாய் போ போ
மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ என்றும்
ஒளி படைத்த கண்ணினாய் வா வா என்றும்
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா என்றும் புத்துயிர் கொடுத்தார் சமூகத்திற்கு பாரதி.
இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம், தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம் என்று ஒவ்வொரு தனிமனிதனுக்காகவும் பாடினார் பாரதி. இதனால் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை நஞ்சை வாயிலே கொண்டுவந்து நண்பரூட்டும் போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று முழங்கியவர் அவர்.
உள்ளத்தில் உண்மை யொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும்
தௌ ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்! என்பதோடு
யாமறிந்த மொழிகளிலே
தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று உறுதியாகக் கூறியிருப்பதும் நோக்கற் பாலதாகும்.
தமிழ்க் கலைகள், இலக்கியங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு எமது பார்வையைக் கூர்மையாக்கி வாழ்வியலை உற்று நொக்கச் செய்து நம்பிக்கை ஊட்டுகின்றன. மனம் இன்பமும் அமைதியும் அடையதிருப்தியோடு வாழவைக்கின்றன.
கலைகளுக்கு அழகுணர்ச்சி முக்கியமாகும். இவ் அழகுணர்ச்சி பாரதியிடம் அதிகமாகப் பிரதிபலிக்கின்றன. மற்றவர் காணாத அழகை பாரதி கண்டு அனுபவித்து அவற்றை வாழும் கவிதைகளாக ஆக்கி இருக்கின்றார்.
இந்த வழியிலே பாரதி வெற்றி கண்ட மகாகவி என்று கூறிவைக்கிறேன். மகாகவி பாரதியை நினைவு கூருவதோடு எல்லாரும் மறுவாசிப்புச் செய்து ஆழமாக மதிப்பீடு செய்து எங்களின் படைப்புகளை மேலும் உயர்ந்ததாக உருவாக்கி வாசகர்களுக்கு நல்விருந்து வழங்கவேண்டும் என்றார்.
செ.துஜியந்தன்