நெடுங்கதை
பாலசுகுமார் -
ஆதி அம்மன் கேணி(அரியமாங்கேணி)
அரியமான்கேணியயை அண்மித்தது சோழப் படை
,மள மளவென மரங்கள் முறிபடும் ஒலியும் யானைகளின் பிளிறலும் குரங்குகள் கதறிக் கொண்டு கிளைகளில் தாவும் ஓசையும் பறவைகளின் பயப் பீதியிலான கீச்சிடும் சத்தமும் அந்த பிராந்தியம் முழுவதையுமே அச்சத்தில் உறைய வைத்துக் கொண்டிருந்தது
.முன்னணியில் சென்ற வீரர்கள் சற்றுப் பின் வாங்க மன்னனின் மாயக் குதிரை படையணியயை ஊடறுத்து பாய எதிரிகளை நோக்கித்தான் மன்னர் விரைகிறார் என பெருத்த இரைசலுடன் எல்லா திசைகளிலிருந்தும் மன்னன் துணையான ஈழப் படை சலசலத்தோடும் ஓடைகளை தாண்டிய போது விரைந்து சென்ற மன்னனது புரவி மறுபுறமாய் திரும்பி கால்களை மேலுயர்த்தி கனைத்து பாய்ந்தது .வேகம் பெற்ற படையணி ஸ்தம்பித்தது .
பின்னால் உள்ள போர் வீரர்கள் என்ன நடைபெறுகிறது என தெரியாமல் தடுமாற ,இரண்டு யானைக் கூட்டங்களிடையே பெரும் சண்டை மரங்கள் எல்லாம் அடிதண்டம் படிதண்டமாய் சாய ,கொம்பன் யானைகள் ஒன்றோடொன்று மோதி புரண்டு சாய ,எங்கு சுற்றினாலும் மாவலியாளின் நீர் நீட்டம் யானைகளின் சண்டைக்கு கொஞ்சம் தடையாய் அமைய.மன்னனின் யானைப் படையின் வருகையும் சண்டையயை தணித்திருக்க வேண்டும்.
எல்லா காட்சிகளையும் மன்னன் சுவாரஸ்யமாக ரசித்துக் கொண்டிருந்தான்.யானைக் கூட்டத்தை பார்த்த போது அவன் நினைவுகள் தஞ்சையயை நோக்கி நகர்ந்தன.தஞ்சை ராஜராஜேஸ்வரம் கட்டப் பட்ட போது யானைகளின் துணை கொண்டு கற்கள் கொண்டுவரப் பட்டமையும் ,பெரும் யானைகள் கற்களை தங்கள் தந்தங்களில் தாங்கி வேலை செய்தமையும் ,இந்த யானைகளுக்குத்தான் எத்தனை பலம் என எண்ணிக் கொண்டு அரியமாங்கேணி அழகோடு அவனும் ஒண்றிப் போனான் ஒரு யுத்தம் முடிந்த களைப்பு எல்லோருக்கும்.
தொடுவான் திசையில் சூரியன் இரவு இருக்கைக்காய் புறப்பட ,நிலா நங்கை முகம் காட்டினாள்.நிலவைக் காணும் போதெல்லாம் திரிபுவனையும் அவனுள்ளத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்வாள்.
தூது சொல்ல பறவையில்லை
துணைக்கு இங்கு யாருமில்லை
ஏது சொல்வேன் என்னவளே
எந்தன் நிலைமை புரிந்து கொள்ள
மென் தோள்மயிலே -என்
வன் தோள் தழுவி
செந்தேன் தமிழாய் -என்
செவி வழி வருவாய்
நினைவுகள் நீட்சி பெற கனவுகளுடன் கண்ணுறங்கினான் ராஜேந்திரன்.ஈழப் படை என்றும் துணையிருக்க அச்சமற்ற இரவாய் ..
எல்லைகள் தோறும் வீரர்கள் விழிப்புடன் இருந்தனர்.பொலநறுவையில் தோல்வியுற்ற சிங்கள அரசர்கள் மாவலியாற்றை கடந்து வரக் கூடும் என்ற அச்சம் எல்லோருக்கும் இருந்தது .மாறி மாறி காவல் காக்க வேண்டிய கடமை வீரர்களுக்கு.
வெல்லும் படையணி விழிப்பாயும் நெருப்பாயும் இருக்க வேண்டும் என்பது ராஜேந்திரனுடய தாரக மந்திரம் .அரியமாங்கேணியயை யாரும் ஊடறுத்து விடக்கூடாது என்பதில் எப்போதும் கவனம் இருந்தது.
நிலவு இப்போ பாலாய் எறிக்க தூரத்தில் சிறிது சல சலப்பை வீரர்கள் உணர்ந்தனர்.சாளம்பன் எனும் வீரன் வேவு பார்ப்பதில் கெட்டிக் காரன் எதிரிகள் நிழல் தெரிய நிழல் பார்த்து பாய்ந்தான் சாளம்பன் இருவர் அவன் கைப்பிடிக்குள் அகப்பட மற்றவர்களை சுற்றிவளைத்து ஒரு சூர சங்காரமே அரங்கேறியது.