(எஸ்.எம்.எம்.முர்ஷித் )
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அக்குறானை ஈரவழிக்குளம் பகுதியில் இன்று (02.12.2018) ஞாயிற்றுக்கிழமை இரவு யானை தாக்கி இருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக கிசிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கிரான் அக்குறானை பகுதியில் மாடு கொள்வனவு செய்வதற்காக சென்ற வேளையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காவத்தமுனையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ஜமால்தீன் முஹமது பரீட் (38 வயது), இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிராஜுதீன் அஸ்ரப் (25 வயது) ஆகிய இருவரையும் யானை தாக்கியுள்ளது.
ஜமால்தீன் முஹமது பரீட் என்பவருக்கு மூன்று நாள் குழந்தையும், சிராஜுதீன் அஸ்ரப் என்பவருக்கு 22 நாள் குழந்தையும் பிறந்துள்ள நிலையில் இஸ்லாமிய மார்க்க முறைப்படி இறைச்சி தானம் செய்வதற்காக மாடு கொள்வனவு செய்வதற்கு சென்றுள்ளனர்.
மாடு கொள்வனவுக்கு இருவரும் சென்ற வேளை காட்டு வழியாக வந்த யானை இருவரையும் தாக்கியுள்ள நிலையில் அவ்விடத்திற்கு விரைந்து வந்த பொது மக்களின் உதவி மூலம் இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
யானை தாக்குதலுக்கு உள்ளான இருவரையும் கருணை உள்ளம் கொண்ட ஈரவழிக்குள மக்கள் அக்குறானை பாலம் வரை கொண்டு வந்து தங்களிடம் ஒப்படைத்தமைக்கு பிரதேச தவிசாளர் என்ற வகையில் நன்றிகளை தெரிவிப்பதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி தெரிவித்தார்.