இக்குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படையற்ற ஒன்றாகும் எனத் தெரிவித்திருக்கும் நீர்ப்பாசன திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் என்.சுதாஹரன், இந்நீர்த்தேக்கத்தின் நினைவுப்பலகை இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் பெயரை கொண்டிருப்பதாகவும் அதனை நீர்ப்பாசன திணைக்களம் என்றும் மதித்து பாதுகாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இரணைமடு நீர்த்தேக்கம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் நாட்டின் விவசாய சமூகத்திற்காக புனர்நிர்மாணம் செய்யப்பட்டு கடந்த 07 ஆம் திகதி ஜனாதிபதியினால் பொதுமக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்நீர்த்தேக்கத்தின் விரிவுபடுத்தல் நடவடிக்கைகளின்போது வீதி மற்றும் பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்காக குறித்த நினைவுப்பலகையை அவ்விடத்திலிருந்து அகற்ற நேர்ந்தது.
ஆயினும் இந்த பழைய நினைவுப்பலகை இந்நீர்த்தேக்கம் 1903 முதல் 1920 வரையான காலப்பகுதியில் அமைக்கப்பட்டமையை எடுத்துக்கூறும் மிக முக்கியமான வரலாற்று சான்றை கொண்டுள்ளமையினால் புனர்நிர்மான பணிகளின் பின்னர் அதனை மீளவும் அவ்விடத்தில் நிறுவும் நோக்குடன் அதற்கு அண்மித்த இடமொன்றிலேயே வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 07 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்விற்கான ஜனாதிபதியின் வருகை 12 மணி நேரத்திற்கும் குறைவான மிகக் குறுகியதொரு காலப்பகுதியில் முடிவு செய்யப்பட்டமையினால் பழைய நினைவுப்பலகையை நிறுவுவதற்கான கால அவகாசம் அப்போது இருக்கவில்லை.
இதனால் பழைய நினைவுப்பலகையை திறப்பு விழாவின் பின்னர் அதே இடத்தில் நிறுவுவதற்கும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் பழைய நினைவுப்பலகை எமது அலுவலகத்திற்கு நகர்த்தப்பட்டபோது அதனை ஒருவர் புகைப்படம் எடுத்திருந்ததோடு, அதற்கு நாம் எவ்வித மறுப்பும் தெரிவித்திருக்கவில்லை.
துரதிஷ்டவசமாக அவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படங்களே எமது திணைக்களத்தின் மீது குற்றம் சுமத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை பின்னரே எமக்கு அறியக் கிடைத்தது.
எவ்வாறான போதும், 2018.12.10 ஆம் திகதி மாலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட பணிப்புரையின் பேரில் வட மாகாண ஆளுநரின் அறுவுறுத்தல்களுக்கமைய இரணைமடுக் குளத்தின் மூல நினைவுப்பலகையை 24 மணி நேரத்திற்குள் மீளவும் அங்கு நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், வட மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தினால் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் 2018.12.11 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு குறித்த நினைவுப்பலகை ஆரம்ப காலம் முதல் நிறுவப்பட்டிருந்த இடத்திற்கு அண்மித்ததாக நிறுவப்பட்டுள்ளது என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.