பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரக்கூடாது என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் நிதானமாகப் பேச வேண்டும். பிரதமர் மோடிக்கு இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு உரிமை உண்டு. பிரதமரைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை. பிரதமர் மோடி தமிழகத்துக்குக் கண்டிப்பாக வருவார். பிரச்சாரம் செய்வார். கர்நாடகாவின் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுதான் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
ஆணையத்தின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என ஆணையத் தலைவரே தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதித்த அனைத்துப் பகுதிகளையும் மத்தியக் குழு பார்வையிட்டு அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தமிழக அரசு மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேல்முறையீடு செய்யும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.