இவையிரண்டும் ஜனாதிபதியின் அரசியல் முன்னெடுப்புகளைக் கேள்விக்குட்படுத்தும் உத்தரவுகளாக அமைந்திருக்கின்றன. ஜனாதிபதி தனது பதவிக்காலத்தில் செய்த அல்லது செய்யாமல்விட்ட எக்காரியத்துக்கும் எதிராக நீதிமன்றம் செல்லமுடியாது என்றுகூறும் (35-1) அரசியலமைப்பின் உறுப்புரையைக் கடந்து நீதித்துறை இவ்விரண்டு தடைகளையும் விதித்திருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் ஜனாதிபதியின் அதிகாரம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.
ஏவ்வித குழப்பங்களுமின்றிப போய்க்;கொண்டிருந்த ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசை திடுதிப்பென்று அகற்றித் தன்விருப்பப்படி மகிந்த தலைமையிலான அமைச்சரவையைத் தோற்றுவித்திருந்தார் ஜனாதிபதி சிறிசேன. ஒக்டோபர் 26இல் இந்நிகழ்வு நடைபெறுதற்குச் சில மணித்துளிகளுக்கு முன்புகூட எவரும் இத்தகையவோர் அசம்பாவிதம் இலங்கை அரசியலில் நிகழக்கூடும் என்று கற்பனைசெய்து பார்த்திருக்கவும் முடியாது. ஆனால் ஜனாதிபதியின் தற்றுணிபால் இது நிகழ்ந்துவிட்டது.
இதற்கு ஜனாதிபதி முன்வைத்த காரணங்கள் எவையும் மக்களால் ஏற்கும்படியாக அமைந்திருக்கவில்லை. ரணில்மீது ஜனாதிபதி கொண்டிருந்த தனிப்பட்ட அபிப்பிராயமே அமைச்சரவையை அகற்றுதற்கு உரிய காரணமாக அமைந்திருந்தது என மக்கள் நம்புகிறார்கள்.. அத்துடன் தான்விரும்பிய ஒருவரைப் பிரதமராக்கி அவர்கீழான அமைச்சரவையையும் ஏற்படுத்தியிருந்தார். இந்தச் செய்கை மகிந்ததரப்பைத் தவிர எவராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக அமையாதால் நாடாளுமன்றம் அமைதியிழந்த சபையாக மாறியது. சுண்டித்தனங்கள்ää மிளகாய்த்தூள் வீச்சுகள் என நாடாளுமன்றப் பண்பாடே கேள்விக்குறியானது.
இதனால் மக்;கள் மத்தியில் ஜனாதிபதி மதிப்பிழந்தார். உலகநாடுகளில் இலங்கைத்தீவின் நன்மதிப்புக் கெட்டது. இலங்கைக்குப் பயணம் செய்யவேண்டாம் என்று பலநாடுகள் தம்பிரசைகளுக்கு வெளிப்படையாகவே அறிவித்திருந்தன. வெளிநாட்டுமுதலீடுகள் பாதிப்புக்குள்ளாயின. வரிச்சலுகைகள் தளம்பின. உள்நாட்டிலும் புதியமுயற்சிகள் தடைப்பட்டன. மொத்தத்தில் நாடு நன்மதிப்பிலும் பொருளாதார வல்லமையிலும் மிகத் தாழ்நிலைக்கு வந்தது.
நாடாளுமன்றத்தில் மகிந்தகும்பலை அமைச்சரவையாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். மகிந்ததரப்புக்குப் பெரும்பான்மைப் பலம் இல்லையென்பதைப் பலதடவைகள் நிரூபித்தும் காட்டினார்கள். ஆனால் ஜனாதிபதியோ அவரால் நியமனம்பெற்ற மகிந்ததரப்போ தங்கள் இடத்திலிருந்து இறங்கிவர விரும்பாமலேயே காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தார்கள். மகிந்ததரப்புக்குப் பெரும்பான்மை இல்லையென அப்பட்டமாகத் தெரிந்த உண்மையை நிலையியற் கட்டளைகளைக் காரணங்காட்டி உதாசீனம் செய்வதிலேயே மைத்திரி தன் நேரத்தைச் செலவிட்டார். அதன்பலனாக ரணில்தரப்பும் அவரோடு துணைநிற்கும் கட்சிகளும் நீதிமன்றத்தை நாடவேண்டிய தேவை ஏற்பட்டது.
நாடாளுமன்றம் நிலைகுலைந்து போனதால் 2019ஆம் ஆண்டுக்குரிய செலவினங்களுக்குப் பணம் ஒதுக்கும் அதிகாரமும் தடுமாற்றங் கண்டது. இந்நிலைமை நீடித்தால் ஜனவரி மாதம் தொடக்கம் அரச உத்தியோகத்தர்களக்குச் சம்பளம் வழங்கமுடியாது போகும். ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்க வகையற்றுப் போகும். அரசஊழியர்களிடைNயும் ஓய்வூதியர்களிடையேயும் பணப்புழக்கம் அற்றுப்போனால் பொருட்களைக் கொள்வனவு செய்யுமாற்றல் வெகுவாகக் குறையும். இதனால் வியாபாரநிலையங்களில் விற்பனை வீழ்ச்சி ஏற்படும். இவ்வீழ்ச்சியால் வியாபார நிலையங்களிலும் சேவை நிலையங்களிலும் தொழில் புரிவோர்க்கான சம்பளக் கொடுப்பனவுகளுக்கும் பணம் அற்றுப்போகும். அன்றாடத் தொழிலாளர்கள் தொழிலற்றுத் தவிப்பர்.
இவையெதுவும் ஜனாதிபதிக்குத் தெரியாத விடயங்களல்ல. இருந்தும் அவர் ரணில்மேற் கொண்ட விரோதஉணர்வால் நிலைகுலைந்த செயல்களில் ஈடுபட்டுத் தன்னிலை இழக்கின்றார். எந்தச் சூழ்நிலையிலும் ரணிலைப் பிரதமராக்க மாட்டேன் என அடம்பிடிக்கிறார். ஒருவேளை அவ்வாறு நேருமாயின் தான் ஜனாதிப்பதவியை விட்டு விலகிவிடப் போவதாகவும் கூறுகிறார். நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெறும் ஒருவரையே ஜனாதிபதி பிரதமராக நியமிக்கவேண்டும் என அரசியமைப்பின் உறுப்புரை(42-4) தெளிவாக உணர்த்தியுங்கூட அதை அறியாதவர்போல் நடந்து கொள்கிறார். மகிந்த தொடர்ந்தும் பிரதமராக நீடிக்க வழிகிடைக்காதா என ஆராய்கிறார்.
நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவால் அரசாங்கம் இல்லாத நாடாக இலங்கை மாறியிருக்கிறது. அரசதலைவர் (ஜனாதிபதி) இருக்கிறார். ஆனால் அவர்கீழே இயங்குகின்ற அரசாங்கம் இல்லை என்ற நிலையில் ஜனாதிபதியின் அடுத்த நகர்வு எதுவாக இருக்கப்போகிறது என்பதுதான் பிரதான கேள்வி. இடைக்காலத் தடையுத்தரவை நீதித்துறை நீக்குமட்டும் அல்லது வழக்கு முடியும்மட்டும் அரசாங்கம் இல்லாமல் நாட்டைக் கொண்டு நடத்துவதென்பது இயலாத காரியம் மட்டுமல்ல அது ஜனநாயக விரோதமான செயற்பாடுமாகும்.
ஜனாதிபதிக்குச் சிக்கலான நிலைமை தோன்றியிருக்கிறது. பாராளுமன்றக் கலைப்புக்கு இடைக்காலத் தடை இருக்குமட்டும், அந்தத் தடையத்தரவின்படி ரணிலின் பிரதமர்பதவி வறிதாக்கப்படவில்லை என்ற செய்தியும் தொக்கிநிற்கிறது. தெளிவாகச் சொல்லப்போனால் ரணில் தற்போதும் நீதித்துறையின் பார்வையில் பிரதமராகவே தெரியக்கூடும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதில் சட்டச்சந்தேகம் இருக்கின்றவரையில் ரணில் பிரதமர்பதவியை இழந்தாரா என்பதிலும் சந்தேகம் இருக்கவே செய்யும். ஏனெனில் பாராளுமன்றக் கலைப்பு என்பது பிரதமரையும் அவரின்கீழ் இயங்கும் அமைச்சரவையையும் செயலிழக்கச் செய்வது தான்.
அடுத்ததாக, ஜனாதிபதி இன்னொரு பிரதமராக மகிந்தராஜபக்ஸவை நியமித்து அமைச்சரவையையும் ஏற்படுத்தியிருக்கிறார். இதற்கு எதிரான தடையுத்தரவும் தற்போது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது முடிவான தீர்ப்பல்ல. தீர்ப்பு வெளியாகும்வரையில் மகிந்த பிரதமர் என்பதும் நிராகரிக்கப்படாத ஒன்றாகவே சட்டத்தின் பார்வையில் கொள்ளப்படும்.
இவற்றின்படி இன்றைய நிலையில் ரணில், ராஜபக்ஸ இருவரில் யார் பிரதமராக இருக்கின்றார் என்பது தெளிவாகவில்லை. அதேபோல் யார் பதவியழந்தார் என்பதும் உறுதிபெறவில்லை. இப்படியான நிலையில் நாட்டைக் கொண்டுநடத்துதற்கு இன்னொரு தடவை ஜனாதிபதி பிரதமர் நியமனமத்தையும் அமைச்சரவை நியமனங்களையும் புதிதாகச் செய்வதற்கு வாய்ப்பிருக்றதா என்பது சட்டச்சிக்கல் நிறைந்த கேள்வியாகும்.
ரணிலையோ அல்லது அவர் தரப்பிலிருந்து வேறொருவரையோ பிரதமராக நியமித்தால் நீதிமன்றத் தடையுத்தரவுகள் நடைமுறையிலிருப்பதைக் காரணங்காட்டி மகிந்த ஆதரவாளர் எவரேனும் சட்டப் பிரச்சினையைத் தோற்றுவிக்கலாம். அதேபோல் ராஜபக்ஸவையோ அவர் தரப்பைச் சேர்ந்தவரையோ புதிய பிரதமராக முயன்றால் அதுவும் ஆபத்தான நிலைக்கே ஜனாதிபதியைத் தள்ளிவிடும். என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஒருதவறை நியாயப்படுத்துவதற்காகத் தொடர்ந்து தவறுகள் செய்து கொண்டிருப்பது ஒரு நாட்டுத் தலைவருக்கு அழகன்று என்பதை ஜனாதிபதி புரிந்து திருந்த வேண்டிய நேரம் இது.
கந்தவனம் கோணேஸ்வரன்.
04.12.2018
04.12.2018