பாரிய போராட்டங்களையடுத்து எரிபொருள் வரி உயர்வை நிறுத்துவதற்கான பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் முடிவு சர்வதேச காலநிலை உடன்பாட்டிலிருந்து விலகிக்கொள்ளும் தனது சொந்த முடிவை நியாயப்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு பரிஸில் கிட்டத்தட்ட 200 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட உலகளாவிய உடன்படிக்கை மிகவும் பிழையானது எனும் தனது முடிவை ஆதரிக்கும் வகையில் பிரான்ஸ் ஜனாதிபதியின் நேற்றைய தீர்மானம் அமைந்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகை மிக மோசமான முறையில் மாசுபடுத்தும் நாடுகளை விடுத்து சில பணக்கார நாடுகளில் மாத்திரம் எரிபொருள் விலை உயர்த்தப்படுவதை தாம் எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.
தமக்கு சுத்தமான காற்று மற்றும் தண்ணீர் தேவை தான் என்று கூறிய ஜனாதிபதி, அதற்காக அமெரிக்க வரி செலுத்துவோர் மற்றும் தொழிலாளர்கள் மற்ற நாடுகளின் மாசுபாட்டை சுத்தம் செய்வதற்கு பணம் செலுத்தவேண்டும் என்பதை தாம் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு பரிஸ் காலநிலை ஒப்பந்தம் அமெரிக்க பொருளாதாரத்தை சேதப்படுத்துமெனவும் டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.