கவிதைகள் புதிய நுட்பங்களுடன் தனது இலக்கையடைந்து கொள்ள அதன் சூழலை புலமைகளால் வடிவமைத்துக் கொள்கிறது.
சமகாலத்தில் பலருக்கு கவிதை எழுதுவதற்கான ஃ எழுத்துகூட வறுமையேற்பட்டுள்ள கால சூழலுக்கான நிலையில் ஒரு சிலரே அனுபவரீதியாக சமூக உறவுமுறைகளுடன் கவிதை எழுதுவதை அவதானிக்க முடிகின்றது
இங்கு நான் குறிப்பிட வருவது அல்லது முயற்சிப்பது கவிதை எழுதுவதற்கான கதை அல்லது மையப்புள்ளி ஒரு சிலரிடமே சிறந்த அணியாக ஆழமாக காணமுடிகிறது.பலரிடம் இந்த இயல்பு மிகப் பின்தங்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது .
ஈழத்துப் படைப்பாளினால் எழுதப்படுகின்ற சமகாலப் படைப்புகளில் யதார்த்தத்தின் தத்துவக் கூறுகளை காணமுடிவதில்லை என்பது எனது கணிதம்.எனினும் குறிப்பிடக்கூடிய சிலர் மட்டும் சமூகத்தின் ஜீவத் துடிப்புடன் கவிதைகளை முன் வைக்கின்றார்கள்.(அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்)அவ்வாறான ஒருவராக நான் ரோஷான் ஏ.ஜிப்ரியை தெரிவு செய்கின்றேன்.
கவிதை எழுதுபவனின் அனுபவமும் அதற்கான மொழிவழி அறிதலும் கவிதையை முழுமைப்படுத்துகிறது.ரோஷான் 1989இல் முன் அறிக்கை என்கிற வாசகத்தை புலன்கள் வழியாக எடுத்துக் கொண்டு இலக்கியவுலகில் பயணப்பட்டவர்.இதுவரைக்குமாக இந்த தளத்தில் 1000க்கு மேற்பட்ட கவிதா கிளர்ச்சியை தந்திருக்கிறார்.
பல ஈழத்துப் பத்திரிகை சஞ்சிகைகளில் இவரது எழுத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.இன்னும் வலைத்தளங்கள் எழுத்து,எதுவரை,மலைகள்,கிண்ணியா நெட்,காற்று வெளி,பதிவுகள்,நந்தலாலா,வல்லமை,வார்ப்பு,கீற்று,முத்துக்கமலம்,திண்ணையென ரோஷான் எழுதியிருக்கிறார்,எழுதுகிறார்.
10க்கு மேற்பட்ட சிறுகதைகள்,வானொலி நாடகங்கள் எனவும் படைப்புகள் தந்த இவர் 1992இல் வெளி வந்த பூந்தளிர் என்கிற இலக்கிய சஞ்சிகைக்கும் சொந்தக்காரர்.
தேசிய,சர்வதேசிய ரீதியாக பல விருதுகளை இவரது படைப்புகளுக்கு அங்கீகாரமாக நாம் காண்கிறோம்.
ஈழத்தை கடந்து நீண்ட காலமாக கட்டாரில் வசித்துவரும் ரோஷானிடம் பல கதைகள் ஏக்கங்களாய் குவிந்து கிடக்கின்றன.அந்த கண்ணீரின் ஒரு துளி நம்மை பெருங் கடலென மூழ்கடிக்கப் பார்க்கின்றது எனினும் அது சுனாமியல்ல அது சுகமான வலி.
இனி ரோஷானின் பிரதிகள்
பூக்களில் மிதந்த
வண்ணத்தி பிடித்து
முட்களில் கோர்த்துவிட
உன்னால் முடியும் என
நேர் எதிரே நிரூபித்து விட்டாய்.
பிரியங்களாலான பிரியமே
எட்டி உதைத்து ஏறி மிதித்து
எனது மரணத்தை எழுதி வாசித்து
எதை நீ செய்திடினும்
உனக்கு மனசில்லை என்று சொல்ல
எனக்கு மனசில்லை.
பிரியங்களாலான வலி என்கிற கவிதையின் வரிகள்.வாழ்வின் தனி மனித பிரியங்களை அவனைச் சார்ந்தவர்கள் நேர் மறையாக புரிதலின்றி தோற்கடிக்க முனையும் தருணங்களில் புனிதமான அவனது அன்பியம் இவ்வாறானதொரு துயர் நிலைக்கு வந்து கேள்விகளை முன்வைத்து மனம் நிச்சயிப்புகளை கவிதை வடிவமாய் மொழிகிறது.
இவரது மற்றுமொரு கவிதை.
கழுத்தை இறுக்க ஒரு கயிறும்
காவ நான்கு உறவும்
தன்னுடன் இருப்பது போலான
கனவிலிருந்து
மீளவே முடிவதில்லை
ஒவ்வொரு பின்னிரவிலும்.
நிகழ் காலத்தில் வசிப்பவனின் நிலை என்கிற கவிதை .எளிமையான உணர்வை அதன் பிறப்பிடத்திலிருந்து முரண் சார் தாக்கங்களுடன் சொல்ல முனைவதோடு வாசகனிடமிருந்து வெகுதூரம் விலகிச் செல்லாமல் கவிதைக்கான கருத்தாக்கங்களை சொல்லி நிற்கிறது.
ரோஷானின் சில கவிதா வரிகளில் வாசகனுக்கான அறிதலின் தன்மையில் மொழி உணர்ச்சி மெல்லியதாய் பயணப்படுகிறது.அவ்வாறான ஒரு கவிதை.
என்னிடம் ஒரு முகமும்
சில முகமூடிகளும் இருக்கின்றன
குழந்தைகள் முன் ஒரு முகமூடியையும்
மனைவியிடம் ஒரு முகமூடியையும்
உறவினர்களிடம் ஒரு முகமூடியையும்
நண்பர்களின் முன் ஒரு முகமூடியையும்
வேலை தளத்தில்
வேறொரு முகமூடியையும்
அணிய வேண்டியது அவசியமாகிவிட்டது.
இந்த கவிதையில் துயரம்,ஏக்கம்,கவலை,காயம்,கண்ணீர் என தன்மையை தாண்டி பிரபஞ்சத்தில் மனிதனின் சுயநலப் பிரதியின் முகத்தை அனுபவங்களின் உடைப்பாய் கவிஞர் தருகிறார்.இந்த கவிதையை மனசில் பதிவேற்றம் செய்யும் போது கவிதா முதிர்ச்சியை நமக்கு வெளிக்காட்டி நிற்கின்றது
இடைச் செருகலின் ஊடே
வேறொருவரை
வலிந்து திணிப்பதர்ற்கென
அரசின் பட்டியலிருந்து நீக்கப்படுகிறது
கண்களில் தேக்கி வைத்திருந்த கனவு
பின்புலம் அற்றவனின் வாழ்வு
அக்கணமே சாபத்துக்குரியதாகிறது.
சாபத்துக்குரியவனின் வாழ்வு என்கிற கவிதை இது விரிவான பதிவாகவும் ஒரு ஆய்வுத் தன்மையுடனும் சமூக வாசிப்பை வலிமைப்படுத்தியும் எழுதப்பட்டிருக்கிறது.அரசியல்,சமூக ஓசையை ஒலிக்க செய்ததினூடாக ரோஷான் ஏ.ஜிப்ரி கவிதைத் தளத்தில் நவீன மனதின் பிறழ்வு நிலைக்கு சூட்சுவமாய் நம்மை அழைத்துப் போகிறார்.
ரோஷான் வி.ஜெகதீசனின் கவிதா சாகரத்தில் எனக்கு அறிமுகமானவர் .கவிதைக்கான நீண்ட பாதையில் இவர் பல மொழியழகியலை தன்வசம் சமகாலத்தில் சேமித்து வைத்திருப்பதை இவரது கவிதைகளூடாக நம் கவிதானுபவம் ஊடறுக்கிறது.இவரது ஒரு கவிதை.
தவற விட்டவைகள்.(21.10.2014)
_____________________
கருவறையில் வைத்து விட்டு
கபுறறைக்கு போன வாப்பா
தவழ்ந்து புரண்டு
தாவி உறங்கிய தாய் மடி
பாலியம் காணாமல் பாடையேறிய
பள்ளித் தோழி
பட்டினியாய் படுத்த இரவுகளில்
தூரத்தில் நினற துயில்
அருகிருந்து அனுபவிக்க கிடைக்காத
என் குழந்தைகளின் குறும்பு
நனைய காத்திருந்த மழை
பொழியாமல் போன தருணம்
நகரப் பேரூந்து பயணத்தில்
என் மணிபர்சுடன் இறங்கிப் போன
பக்கத்து இருக்கைப் பயணி
அநாதரவாக நின்ற போது
ஆதரித்த முன் அனுபவம் அற்றமுகம
வாழ்க்கை என்று வந்த பின்
இறக்கை கட்டிப் பறந்த
இருபது வருடங்கள்
இன்னும்
சேமிக்க முடியாமல் செலவு போன
சில்லறைகள்
என் கபுறறை வரைக்கும் நீளும்
கவலைகள்.
- ஏ.நஸ்புள்ளாஹ்.