வவுனியா நகரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்துறை சேவையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“என்னுடைய உருவப் பொம்மையை எரிப்பதையிட்டு நான் என்றுமே கவலை கொள்ளப்போவதில்லை. ஆனால் தமிழ் மக்களின் நீண்ட கால கொள்கைகளை நீங்கள் இணைந்திருக்கும் கட்சியுடன் சேர்த்து எரித்துவிடாதீர்கள்.
நான் வவுனியா வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழரசுக் கட்சியினரால் எனது உருவப் பொம்மை எரிக்கப்படப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் ஆதரவாளர்கள் சிலர் தகவல் வெளியிட்டிருந்தனர்.
இன்று காலை எனக்கு பல தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. இன்று வவுனியாவில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு முன்னர் ஒரு கட்சியினைச் சேர்ந்தோர் எதிர்ப்புத் தெரிவித்து எனது உருவப் பொம்மையை எரிப்பதற்கு ஆயத்தம் செய்வதாகச் சொன்னார்கள்.
எனது உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள் அதைக்குறித்து நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் தமிழ் மக்களின் கொள்கைகளை நீங்கள் ஒருபோதும் எரித்து விடாதீர்கள்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.