ஒரு கவிதை
யோசித்துக் கொண்டிருந்தது
அதை கட்டந்தறையில் இருந்து துவங்குவதா
அல்லது
அடர்ந்த காட்டின் நடுப் பகுதியில் இருந்து
ஒரு பயங்கர மிருகத்தின் வடிவத்தில் துவங்குவதா
அல்லது கடலின் அடிப் பகுதியில் இருந்து
ஒரு சுறா மீனின் வடிவத்தில்
துவங்குவதா என
வானத்துக்கும் பூமிக்கும் நடுவிலிருந்து
தலையை சொரிந்து கொண்டிருந்தது கவிதை
கவிதையை காற்றின் மூலம் அழைத்து
குழந்தைகள் விளையாடும்
இடத்துக்கு அனுப்பி வைக்கிறேன்
பொம்மைகளோடும் குழந்தைகளோடும்.
மாலைப் பொழுதை
கொண்டாடத் துவங்கிய கவிதை
இப்போது
துவங்க வந்த கதையை
மறந்திருக்க வேண்டும்
ஏ.கே. முஜாரத்