LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, December 14, 2018

நாட்டை சரியான முறையில் கொண்டு செல்வதற்கு நீதி மன்றம் காட்டிய வழி

                                                                   (குகா)
நிறைகுழாம் தீர்ப்பாக 19வது திருத்தச் சட்டத்திற்கு சொல்லப்பட்டிருக்கின்ற பொருள்கோடலை யாருக்கும் வெற்றியாக இன்னொருவருக்கான தோல்வியாக எடுத்துக் கொள்ளாது. நாட்டை சரியான முறையில் கொண்டு செல்வதற்கு நீதிமன்றம் காட்டிய வழியாகவே கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் பாராளுமன்றம் கலைக்க்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதியினால பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான விடயம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அதன் தீர்ப்பு வெளியாகியிருக்கின்றது. நொவம்பர் மாதம் 13ம் திகதி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது சுமார் 17 வழக்குத் தாக்கல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் முதலாவது வழக்குத் தாக்கலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் ஐயாவினால் தாக்கல் செய்யப்பட்டது. அதன் தீர்ப்பு இன்று வெளிவந்துள்ளது.

இதனை முதல் தடவையில் 03 நீதிபதிகளின் முன்னிலையில் கேட்கப்பட்டது. நிமல் ஸ்ரீபால டீ சில்வா அவர்களின் கோரிக்கைக்கமைவாக 07 நீதிபதிகள் முன்னிலையில் கேட்கப்பட்டது. வெளியிடப்பட்ட தீர்ப்பு முழுமனதாக நிறைகுழாம் தீர்ப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அவர்கள் 19வது திருத்தச்சட்டத்திற்கு முரணான விதத்தில் பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமாக இருந்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானத்தை நிறைவேற்றி அது ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு அது ஜனாதிபதியால் பிரதம நீதியரருக்கு அனுப்பப்பட்டு அவருடைய நெறிவுறுத்தலுக்கு அமையவே பாராளுமன்றம் கiலைக்கப்பட முடியும். இவ்வாறான நடைமுறைகளை ஜனதிபதி அவர்கள் பின்பற்றவில்லை.

உண்மையில் இதற்கு ஜனாதிபதியை மட்டும் நேரடியாகப் பொறுப்புக் கூற முடியாது. பலரால் ஜனாதிபதி பிழையாக வழிநடத்தப்பட்டு இருக்கின்றார் என்றே கூற வேண்டும். முன்னாள நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை தலைவராகக் கொண்ட குழுதான் இந்த 19வது திருத்தச் சட்டத்தை உருவாக்கியது. ஆனால் அதே விஜயதாச ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதிக்கு பிழையான வழிகாட்டலைச் செய்திருப்பதென்பது ஒரு வருந்தத்தக்க விடயமாகும்.

எதுவாயினும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நாட்டில் இடம்பெற்ற  அரசியற் குழப்பங்களை வெளிவந்திருக்கும் தீர்ப்போடு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது தான் இந்த நாட்டின் பால் உண்மையான பற்றுள்ளவர்கள் என்று சொல்லக் கூடிய அரசியலாளர்கள் செய்யக் கூடிய வேலை. இது தொடர்பாக யாரும் எவ்விதமான அவமானங்களையோ அல்லது தோல்வியையோ பெற்றதாக நினைக்க வேண்டியதில்லை. உண்மையில் இவ்விடயம் அரசியலமைப்பு திருத்தத்திற்கான ஒரு உண்மையான பொருள்கோடலை கண்டிருக்கின்றோம்.

மக்கள் 05 ஆண்டுகளுக்காக ஆணை கொடுத்திருக்கின்றார்கள். அவ்வப்போது ஏற்படுகின்ற சிக்கல்களுக்கு சரியான முறையில் தீர்வு கண்டு மக்களால் தரப்பட்ட ஆணைக்கேற்ப செயற்படுவதுதான் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அனைத்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களினதும் கடமையாக இருக்கும்.

எனவே இனிமேல் பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் சட்டத்தின் ஓட்டைகளைக் கண்டுபிடிப்பது, தமிழ், ஆங்கில, சிங்கள பதிப்புகளில் உள்ள வித்தியாசங்களை வைத்து வெற்றி காண்பது என்கின்ற இந்த வழிகள எல்லாம் பிழையான வழிகள் என்பது இப்போது தீர்மானிக்கப்பட்டு விட்டது.

ஜனாதிபதி அவர்கள் மிகப்பெரிய கடமையைப் பொறுப்பேற்று பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டார். இந்த நாட்டில் மிகப் பெரிய அராஜகமான முறையில் முழு அதிகாரங்ளையும் தனிமனித கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய 18வது திருத்தத்தை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவர்கள் இந்த நாட்டை ஒரு பிழையான திசைக் கொண்டு செல்ல இருந்த நேரத்தில் தான் மைத்திரிபால சிறிசேன அவர்கள் நிறைவேற்று அதிகார முறைமையை ஒழித்து பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்குவேன் என்றுதான் மக்களிடம் வாக்குறுதி அளித்தார். மக்கள் அதற்காகவே அவருக்கு ஆணை கொடுத்தார்கள்.

நிறைவேற்று அதிகார முறைமை ஒழிக்கப்பட வேண்டும், புதிய தேர்தல் முறை கொண்டு வரப்பட வேண்டும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் இவை தான் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இந்த விடயங்களை செய்வதற்கான வழிவகைகளைக் கண்டு செயற்டுவதற்கான பாதையில் செல்வதுதான் நாட்டுக்கு உகந்தது. நாட்டு மக்களுக்கு அதுதான் சிறந்த வழிகாட்டுதலாக அமையும்.

இந்த வழக்கு நடவடிக்கைகளில் எமது உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் முன்முறமாக ஈடுபட்டவர். உண்மையில் நாம் உட்பட முழு நாடும் அவருக்கும் அவருடைய சிரேஸ்ட சட்டத்தரணி கனகீஸ்வரன் அவர்களுக்கும் நன்றி பாராட்டுதலை வழங்க வேண்டும். இது தனிப்பட அவர்களுக்கான பாராட்டு என்று இல்லாமல் ஜனநாயகத்தை மீள்விப்பதற்கு அவர்கள் செய்த உதவி கௌரவிக்க்பட வேண்டும். இந்த வகையிலே முன்பு சுமந்திரன் சொன்னது போல மீண்டும் தேசிய அரசாங்கம் உருவாகுவதற்காக இரு கட்சித் தலைவர்களும் முன்வர வேண்டும்.

ரணில் அவர்களும் வெற்றி கிடைத்து விட்டது. இது தனக்கான வெற்றி என்று தலையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏன் இந்தப் பிரச்சனை வந்தது என்கின்ற விடயங்களைப் பார்க்க வேண்டும். பிரதமராக இருந்த போது அவரால் மேற்கொள்ளப்பட்ட சில விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு அதிருப்தி இருந்தது. இவ்வாறு அதிருப்தி ஏற்படாத வகையில் இருவரும் ஒன்று கலந்து செயற்ட வேண்டும். மத்திய வங்கி பிரச்சனை தொடர்பில் ஜனாதிபதி அறிக்கை மூலம் நடவடிக்கை மேற்கொள்வதற்கு ரணில் அவர்களும் ஒத்துழைக்க வேண்டும். அதன் மூலம் மக்கள் மனங்களில் உள்ள சந்தேகங்களை நிவர்த்திக்க வேண்டும். இது தொடாப்பில் தான் முக்கிய பிரச்சனை ஏற்பட்டதாக நாங்கள் நினைக்கின்றோம்.

ஏற்கனவே நடந்த விடயங்களை எல்லாம் நல்ல பாடத்திற்கான பரீட்சை என எடுத்துக் கொண்டு. இனிவரும் காலம் ஒரு புதிய அத்தியாத்தை இரு தலைவர்களும் நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும். தேசிய அரசாங்கத்தில் இருந்து பிரிந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை மீள் அமைக்கும் எண்ணத்தில் இருக்கின்றார்கள். பொதுஜன பெரமுன இந்த நாட்டை மீண்டும் நெருப்புக்குள் தள்ளும் செயற்பாட்டை மேற்கொள்ளக் கூடாது.

இந்த நாட்டின் மக்கள் அனைவரும் சிறந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டும். சுமார் 90 வீதம் வரை நிறைவு பெற்ற புதிய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக பூர்த்தியாக்கப்பட வேண்டும். புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வருவதால் இந்த நாட்டிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மாகாணசபைகள் மூலம் அதிகாரங்கள் நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டிருக்கின்றது. இது தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் மேசியக் கூட்டமைப்பு பரினாமத்திலே சொல்லப்பட்ட கொள்கையின் வெளிப்பாடே. இது மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும். சமஷ்டி முறைமையும் நாட்டிற்கு நண்மையே பயக்கும். சொற்களை வைத்து கோசங்கள் இடாமல் அதிகரங்கள் பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்டு பிராந்தியங்களில் உள்ள வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தக் கூடிய ஏற்பாடுகளை இந்த சமஷ்டிக் கட்டமைப்பு செய்யும். வார்த்தைப் பிரயோகங்களை வேறு விதத்தில் பாவித்து அதிகாரங்கள் பகிர்ந்தளிப்புக்குச் செல்ல வேண்டும்.

எனவே நிறைகுழாம் தீர்பாபக 19வது திருத்தச் சட்டத்திற்கு சொல்லப்பட்டிருக்கின்ற பொருள் கோடலை யாருக்கும் வெற்றியாக இன்னொருவருக்கான தோல்வியாக எடுத்துக் கொள்ளாது. நாட்டை சரியான முறையில் கொண்டு செல்வதற்கு நீதி மன்றம் காட்டிய வழியாகக் கொள்ள வேண்டும். எமது நீதித்துறை தலைநிமிர்ந்து நிற்கின்றது. நீதிபதிகள் சுயமாகச் செயற்பட்டிருக்கின்றார்கள். அதே நேரத்திலே ஜனாதிபதி அவர்களும் இதில் எவ்வித தலையீட்டையும் மேற்கொள்ளவில்லை. தீர்ப்பை ஏற்பதாக அவர் சொல்லியிருக்கின்றார். அவர் சொன்னபடியே செய்வார் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கின்றது என்று தெரிவித்தார்.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7