
மெக்சிகோவிலிருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதாக கூறப்படுகிறது. இதனை தடுப்பதற்காக ஏற்கனவே அங்கு 670 மைல் தொலைவுக்கு பல பகுதிகளிலும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இருநாட்டு எல்லைப் பகுதியில் 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு மிகப்பெரிய தடுப்புச்சுவர் கட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது ட்ரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று, ஜனாதிபதி பதவியை ஏற்றநிலையில், மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கான நிர்வாக உத்தரவில் கடந்த ஆண்டு டிரம்ப் கையொப்பமிட்டார்.
அதுமட்டுமின்றி, இந்த தடுப்புச்சுவர் கட்டுவதற்கான பணத்தை மெக்சிகோ தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆனால், அதை மெக்சிகோ நிராகரித்து விட்டது.
இந்த நிலையில் குறித்த திட்டத்துக்காக தேவைப்படும் நிதியில் 570 கோடி டொலர் நிதி ஒதுக்கீட்டுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பான விவாதத்தை அடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த 217 உறுப்பினர்களும் எதிராக ஜனநாயக கட்சியை சேர்ந்த 185 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
எனினும், டிரம்ப்பின் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த நாடாளுமன்ற மேல்சபையில் நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் அவருக்கு சற்று பின்னடைவு ஏற்படலாம் என கருதப்படுகிறது.
மதில் சுவர் கட்டுவதற்காக இவ்வளவு பெரிய தொகையை முடக்கினால் அமெரிக்க அரசின் பிற முக்கிய துறைகளுக்காக ஒதுக்கப்படும் நிதியில் பற்றாக்குறை ஏற்படலாம் என கூறப்படுகின்றது.
