திருகோணமலை வடக்கு எல்லையில் உள்ள தென்னமரவாடி என அழைக்கப்படும் தென்னவன் மரவு அடிக் கிராமத்தில் அமைந்துள்ள கந்தசுவாமி மலைபகுதியில் சட்டவிரோதமாக கட்டடம் அமைக்கப்படுகிறது.இதனால் அக் கிராமத்தின் மக்கள் பெறும் அச்சத்துடன் உள்ளனர் இதன் நோக்கம் பெளத்த விகாரைக்கான அடித்தளம் என்பதே மக்களின் அச்சத்திற்கான காரணமாகும் என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளரும், திருகோணமலை நகரசபை உறுப்பினருமான சி. சிவகுமார் (சத்தியன்) கண்டனம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
இந்த கிராம மக்கள் மூன்று தடவைகள் பெளத்த விகாரை அமைப்பதற்கான முயற்சியில் இறங்கியவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்துள்ளனர். அதன் மாற்று சூழ்ச்சியாக தொல்பொருள் ஆராய்ச்சி என பெயர் பலகை அவ்விடத்தில் மாட்டப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத கட்டடம் இவ் பெயர் பலகை மாட்டப்பட்டுள்ள இடத்திலே அமைக்கப்படுகின்றது.
இவ் முயற்சியை நிறுத்த குச்சவெளி பிரதேச செயலாளருக்கு மனு கொடுப்பதற்காக மக்கள் கையொப்பத்துடன் நான் மக்களுடன் நேரடியாக சென்றேன் அதற்கு பிரதேச செயலாளர் 2013 ம் ஆண்டு இந்த இடம் தொல்பொருள் ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்டு அரச வர்த்தகமானியிலும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது அதிர்ச்சிக்குரிய விடயமே தமிழர் நிலங்களை கைப்பற்ற காட்டு இலக்கா, தொல்பொருள் ஆராய்ச்சி, பறவைகள் சரணாலயம், கண்டல் காடு இப்படி பல அரச நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளன . தமிழ் கிராமங்கள் இவ்வாறு சிதைக்கப்படுகின்றன அரசு தமிழ் பகுதி நிலங்களை இவ்வாறு கைப்பற்றும் போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ் மக்களின் அடிப்படை சமய கலாசார மற்றும் வாழ்இடங்கள் பல தொல்பொருள் ஆராய்ச்சி எனும் போர்வையின் கீழ் கைப்பற்றப்பட்டு விட்டன அந்தவகையில் கண்ணியா வெந்நீர் ஊற்று, இலங்கை துறைமுகத்துவாரம் என்று தொடர்ந்து இறுதியாக தமிழர் பாரம்பரிய கந்தசுவாமி மலையும் இவ் பட்டியலில் இணைந்து விட்டது.
எனவே இவ் முயற்சியை தடுத்து நிறுத்த தமிழ் உணர்வாளர்கள் முன்வர வேண்டும் என திருகோணமலை நகரசபை உறுப்பினர் சத்தியன் தெரிவித்தார்.
அ . அச்சுதன்