"தெலங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் ,தெலுங்கு தேசம், போன்றவை அரசியல் கட்சிகளல்ல, அவை தனியார் நிறுவனங்கள்'' என்று அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா சட்ட மன்றத் தேர்தல் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நிதின் கட்கரி, " இந்தியாவில் ஜனநாயக முறைப்படி நடத்தப்படும் கட்சி பாஜக மட்டுமே.
இங்கு மட்டும் தான் தேநீர் விற்பனை செய்தவர் நாட்டின் பிரதமராக முடியும். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் கூட கட்சியின் தேசியத் தலைவராக இருக்க முடியும்.
காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகியவை அரசியல் கட்சிகளல்ல, தனியார் நிறுவனங்கள். இக்கட்சிகளில் வாரிசுகளும், குடும்ப உறுப்பினர்களும் மட்டுமே கட்சியின் முக்கியப் பொறுப்புகளைப் பெற முடியும். இவர்கள், மக்கள் நலனில் எப்படி அக்கறை காட்டுவார்கள்? தங்கள் குடும்ப நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள மட்டுமே, ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்துவார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சியை எதிர்த்த சந்திரபாபு நாயுடு, இப்போது கம்யூனிஸ்ட் கட்சி, தெலங்கானா ஜன சமிதி,காங்கிரஸ் ஆகிய கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளார்.இந்தக் கூட்டணிக்கு கொள்கை கிடையாது. எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம்.
இந்த சந்தர்ப்பவாத கூட்டணியை தெலங்கானா மக்கள் புறக்கணிக்க வேண்டும். தெலங்கானா மக்கள் ஜாதி, மத இன வேறுபாடுகளை மறந்து மாநிலத்தின் நலனையும் தேச நலனையும் கருத்தில் கொண்டு பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார் நிதின் கட்கரி.