தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் கே.பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள், தோழமைக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்துகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள கனிமொழி, ''ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் உலகில் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு சமாளிப்பது அத்தனை எளிதான காரியமல்ல.
மறைந்த அதிமுக தலைவர் ஜெயலலிதா அந்த சவாலை ஏற்றுக்கொண்டு, எதிர்நீச்சல் போட்டு வெற்றிகரமாக வலம் வந்தார். ஆனால் அவரின் இறுதி நாட்களில் அவர் மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிர்ஷடவசமானவை'' என்று தெரிவித்துள்ளார்.