மெங்க் வான்சூ தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) 3 ஆவது நாளாக வான்கூவர் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதன் போது மெங்க் வான்சூவிற்கு பிணை வழங்குவது தொடர்பான தீர்மானம் இன்று வழங்கப்படும் என நேற்றைய விசாரணையின் போது நீதிபதி தெரிவித்திருந்தார்.
நேற்று இடம்பெற்ற விசாரணையின் போது, அரச தரப்பு மற்றும், சந்தேகநபர் தரப்பு வாதங்கள் இடம்பெற்றது. அவருக்கு பிணை வழங்கப்பட்டால் வான்கூவரில் இருந்து தப்பி சென்றுவிடுவார் என்றும் அரச தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இருப்பினும் அவரது கணவருக்கு சொந்தமாக, வான்கூவரில் 15 மில்லியன் டொலர் பெறுமதியான இரண்டு வீடுகள் உள்ளது என்றும், குறித்த வீட்டிலேயே அவர் தங்குவார் என்றும் அவர் நீதிமன்றத்தின் நிபந்தனைகளுக்கு இணங்குவதை அவரது கணவர் உறுதிப்படுத்திக் கொள்வார் என்றும் மெங்க் வான்சூவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
எனினும், அவ்வாறு பிணை வழங்கப்பட்டால் அவர் குறித்து உத்தரவாதம் அளிக்கக்கூடிய விடயங்கள் தொடர்பாக மேலும் ஆராயவுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டிருந்ததுடன் வழக்கு விசாரணை இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டது.
ஹூவாவி நிறுவனரின் மகளும் அவர் நிறுவிய ஹுவாவி டெக்னால ஜீஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான 46 வயதான மெங்க் வான்சூ, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விதித்த தடைகளை மீறி ஈரானுக்கு தொலைதொடர்பு கருவிகளை விற்பனை செய்ததாக டிசம்பர் 1 ஆம் திகதி கனடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.