(குகா)
பணத்திற்கும் அடிமையாகாமல், தமது பதவிகளை தூக்கி வீசி விட்டு உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்ற சமூகமாக எமது தலைமை இருக்கின்றது என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
நஸீர் ஹாபிஸ் பௌண்டேஷன் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
இலங்கையில் ஒரு பாரிய அரசியல் முரண்பாடு ஏற்பட்டிருக்கின்ற நிலைமையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஒரு பாரிய சக்தியாக பல இனங்களாலும், பல அரசியல் வாதிகளாலும், அரசியல் தலைமைகளாலும் பேசுகின்ற சக்தியாக இருக்கின்றது.
அரசியலில் சாணக்கியம் மாத்திரமல்ல ஒரு நியாயமான, இறையான்மையான அரசியல் தீர்வை எடுத்த சமூகம் என்ற வரலாற்றை பதித்த முஸ்லிம் சமூகமாக அதன் தலைமையாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த நாட்டிலே மதிக்கப்பட்டிருக்கின்ற வேலையிலே நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம்.
பல பணங்கள் வீசப்பட்டும் எந்தவித பணத்திற்கும் அடிமையாகாமல் முஸ்லிம் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காக தமது பதவிகளை தூக்கி வீசி விட்டு உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்ற சமூகமாக எமது தலைமை இருக்கின்றது.
எங்களுக்கு அரசியல் அதிகாரம் வரும், ஆனால் நேர்மையான, நியாயமான அரசியல் அதிகாரத்தை பெறுவோம். அரசியல் அதிகாரம் வருகின்ற போது எவ்வாறு அரசியல் அதிகாரத்தை செய்து முடிப்போம் என்பதை கிழக்கு மாகாண ஆட்சிக் காலத்தில் செய்து முடித்து இருக்கின்றோம்.
கிழக்கின் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் மாகாணத்தினதும் மாவட்டத்தினதும் குறிப்பாக இப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கும் முன்பள்ளி ஆசிரியைகளினது வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு அவர்களுக்கான நிரந்தர சம்பளம் மற்றும் சம்பள அதிகரிப்பு போன்றவற்றை மேற்கொண்டுள்ளோம்.
அத்துடன் பதவியில் இல்லாத போதும் கல்விக்கான தனது பணிகளை நஸீர் ஹாபிஸ் பௌண்டேஷனூடாக முன்னெடுத்து வருவதுடன், எதிர்காலத்திலும் தனது பணி தொடரும் என்றார்.
இதன்போது வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 300க்கும் அதிகமான மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் மற்றும் ஏனைய கற்றல் உபகரணங்கள் அடங்களாக புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்ந்கிழ்வில் அதிதிகளாக ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் ஆர்.வாஷித் அலி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயீல் ஹாஜி, முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் சேகு அலி, ஏறாவூர் நகர சபை உறுப்பினர் எஸ்.சரூஜ், முன்னாள் உறுப்பினர் எஸ்.நாசர் மற்றும் ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் நஸீர் ஹாபிஸ் பவுண்டேஷன் ஏற்பாட்டில் பல திட்டங்களும் வாழ்வாதார உதவிகளும் முன்னெடுத்து வருகின்றது.
அதனடிப்படையில் பாடசாலை மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்தும் நோக்கிலும், வறுமைக் கோட்டின் கீழ் கற்றலை மேற்கொள்ளும் மாணவர்களின் நலன் கருதியும் தனது சொந்த நிதியில் சென்ற வருடம் ஏறாவூரில் உள்ள சுமார் 5000க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.