ஈரோட்டை சேர்ந்த சக்தி கன்ஸ்டரக்ஷன்ஸ் எனும் கட்டுமான நிறுவனம் சென்னையில் கட்டுமானப்பணியை மேற்கொண்டு வருகிறது. இதில் சைட் இன்ஜினியராக பணியாற்றுபவர் தங்கதுரை (33). இவர்கள் மாந்கராட்சியில் அனுமதிப்பெற்று பணிக்காக சாலையை பள்ளம் தோண்டும்போது அங்கு வந்த போக்குவரத்து ஆய்வாளர் அய்யப்பன் இதுகுறித்து கேட்டுள்ளார்.
எப்படி பள்ளம் தோண்டலாம் என கேட்டுள்ளார். அவர்கள் மாநகராட்சி அனுமதி கொடுத்த ஆவணங்களை காட்ட அதெல்லாம் எனக்கு தெரியாது என்று கூறி நீங்கள் காக்கி சட்டையை மட்டும் கவனிக்கிறீர்கள் நான் தான் இங்கே பவர். என்னை மீறி எதுவும் செய்யமுடியாது என்று கூறியுள்ளார்.
பின்னர் தங்கதுரையின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த அய்யப்பன் அதை பணையமாக வைத்துக்கொண்டு ரூ.8000 பணம் கொடுத்தால்தான் வண்டியை கொடுப்பேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் வேறு வழி தெரியாத தங்கதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் போக்குவரத்து ஆய்வாளர் அய்யப்பன் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக புகார் அளிக்க லஞ்ச ஒழிப்பு போலீஸார் அய்யப்பனை பிடிக்க வலைவிரித்தனர்.
அதன்படி தங்கதுரையிடம் பேசி அய்யப்பன் கேட்கும் ரூ.8000 ஆயிரத்தை தருவதாக ஒப்புக் கொள்ளச்சொல்லி எங்கு வந்து தரவேண்டும் என்று கேட்கச்சொல்லியுள்ளனர். அதன்படி கேட்க ராயலா நகரில் உள்ள தனது போலீஸ் பூத் அலுவலகத்துக்கு வரச்சொல்லி உள்ளார் ஐயப்பன்.
உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை தங்கதுரையிடம் கொடுத்து தனியாக ஒரு இடத்தில் மறைந்திருந்துள்ளனர். இன்று காலை வழக்கம்போல் அய்யப்பன் பணியிலிருக்க தங்கதுரை ரூ. 8000 ரசாயனம் தடவிய நோட்டுக்களுடன் அவரைப்பார்க்கச் சென்றுள்ளார்.
பணம் கொண்டு வந்தாயா என்று அய்யப்பன் கேட்க, ரூ.8000 பணத்தை கொடுக்க பைக் சாவியை அய்யப்பன் தர தயாராக இருக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப்பின் மாலை அவரை கைது செய்த போலீஸார் குற்றவியல் நடுவர்முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.