மகாராஷ்டிர மாநிலம் ஷிர்டியில் சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாடுமுழுவதும் இருந்து வருகை தருகின்றனர். பக்தர்கள் தரும் காணிக்கை, உண்டியல் வசூல் மூலம் அன்னதான திட்டம், கிராமப்புற மேம்பாட்டு திட்டம் உள்ளிட்டவற்றை ஷிர்டிஅறக்கட்டளை ஏற்கெனவே நிறைவேற்றி வருகிறது.
இந்த பகுதி மிகவும் வறட்சியான ஒன்றாகும். பல ஆயிரம் ஏக்கர் நிலம் நீர்பாசனம் இன்றி வறண்டு போயுள்ளது. இதையடுத்து மரத்வாடா பகுதிக்கு கோதாவரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
ஆனால் நிதிபற்றாக்குறையால் தவிக்கும் மகாராஷ்டிர அரசு இதனை செயல்படுத்த முடியாமல் இருந்து வருகிறது. தொடக்கநிலையியலேயே இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதையடுத்து மரத்வாடா பகுதி விவசாயிகள் பயன் பெறும் வகையில் கோதாவரி நீர்பாசன திட்டத்தை மேற்கொள்ள ஷிர்டி அறகட்டளை 500 கோடி ரூபாய் பணத்தை வட்டியில்லா கடனாக வழங்க முன் வந்துள்ளது.
திட்டத்தை செயல்படுத்திய பிறகு மாநில அரசு கொஞ்சம் கொஞ்சமாக அந்த பணத்தை திரும்பி செலுத்தலாம் என ஷிர்டி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
முதல்வர் தேவேந்திர பட்னவிஸூம், ஷிர்டி அறக்கட்டளையின் அறங்காவலுரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதன்படி முதல்கட்ட பணம் ஷிர்டி அறக்கட்டளை சார்பில் மகாராஷ்டிர அரசுக்கு வழங்கப்பட உள்ளது.