இறைமகன் இயேசு அன்பும், கருணையும் கொண்டவர். தன்னை நாடுபவருக்கு நன்மைகள் தருகிறவர். அவரது சொல்லும், செயலும் அதிகாரம் மிக்கவையாக இருந்தன, இருக்கின்றன, இருக்கவும் போகின்றன. எனவே, அதிகாரம் பொருந்திய அவர் தான் வழங்கக் கூடிய அருளை வழங்குவதில் தவறிப்போக வாய்ப்பே இல்லை. ஷதன்னிடம் அப்பம் கேட்டு அழும் பிள்ளைக்கு அதன் தந்தை கல்லைக் கொடுப்பானா?| என்று கேட்ட அவரே, அவர் பிள்ளைகள் நமக்கு நாம் கேட்டவைக்கெதிராக தீமைகள் தருவாரா என்பதை ஒரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதே வேளை, நன்மைகள் தருகிறவர் எனும்போது, சமயங்களில் அவரை நாடுகின்றவர்கள் விரும்புகின்ற நன்மைகளைத்தான் தருகின்றவர் என்றில்லை. அவர் தன்னை நாடுகின்றவருக்கு எது நன்மையாக இருக்கக் கூடுமோ அதையே தருகின்றவராய் இருக்கின்றார். இதனால் வேளைகளில், அவரிடம் கேட்டவைகளுக்கும், நாம் பெற்றுக் கொண்டவைகளுக்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கக் கூடும். நமது எதிர்பார்ப்புக்கள், வேண்டுதல்கள் நிறைவேறாமல் போனதுபோல் தோன்றும். ஆனாலும் ஆழமாக யோசித்து, நடப்பவை பற்றி எண்ணிப் பார்க்கும்போதுதான் இறைவன் நமக்கு எவ்வளவு நன்மைகள் செய்திருக்கிறார் என்று தெரிய வரும். அதைப் புரிந்து கொள்ள திறந்த மனத்துடன் நாம் இருக்க வேண்டும். நாம் கொண்டிருக்கக் கூடிய மிகவும் நம்பகரமான நண்பன் அவர் ஒருவரே. நம்பிக்கையுள்ள நண்பன் நமக்கு விரோதம் செய்வானா? துரோகம் இழைப்பானா?
நம் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு உற்ற நண்பன் அல்லது நண்பி என்று சொல்லக் கூடிய ஒருத்தர் இருப்பதுண்டு. அந்த நண்பர்கள் காலக் கிரமத்தில் பல்வேறு காரணங்களின் நிமித்தம் நம்மை விட்டுப் பிரிந்து விடுவதுண்டு. இதனால், எமது வாழ்வில் நண்பர்கள் என்று பலர் வருவார்கள், போவார்கள். அதிர்~;டம் உள்ள ஒரு சிலருக்கே நீண்ட காலத்திற்கு ஒரே நண்பர் துணையாக அமைவதுண்டு. ஆனால் இறைவன் ஒருவர்தான் எந்தக் கால கட்டத்திலும் நம்மை விட்டு அகலாத ஒரே நண்பனாக, என்றும் நம் நலனையே மனதிற் கொண்ட ஒருவராக இருக்கிறார்;. இருந்தும் நாம் வேண்டுவது அவரிடமிருந்து கிட்டவில்லை என்றால் நாம் மனம் தளர்ந்து போய் விடுகின்றோம், எமது விசுவாசம் ஆட்டம் கண்டு போகிறது. நம் விசுவாசத்திற்கான மிகப் பெரிய சோதனை என்பது இப்படியான வேளைகளில்தான் ஏற்படுவதுண்டு. நாம் இத்தகைய நிலைகளை உறுதியுடன் தாண்டும் போதுதான் எமது விசுவாசம் ஆட்டம் காணாத, உறுதியான விசுவாசமாக அமைகின்றது. ஆம், நாம் எதிர்பாராதவைகள் நம் வாழ்வில் நிகழ்ந்து நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தினாலும், அதையெல்லாம் கடந்து, ஷஇறைவா உமக்கு நன்றி!| என்று எம்மால் கூறமுடியுமாக இருந்தால், நம் விசுவாசம் பலமுள்ள கோட்டை என்றுதான் அர்த்தப்படும்.
(தொடரும்)
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்