———- நமசிவாய வாழ்க ———-
உயிரணு தந்த தந்தைதாள் போற்றி
கருவினில் சுமந்த தாய்அடி போற்றி
உயிரிலும் மேலாய் தமிழ் மொழி போற்றி
சிவனடி பாதம் நாளும் போற்றி !
பண்ணிய பாவங்கள் மண்ணுடன் மறைய
முன்வினை பயன்கள் முழுதாய் முடிய
புண்ணியம் யாவுமே என்னுளே உறைய
என்நிலை உயர்ந்தது இனிதாய் விடியும்
கருனையை கண்களில் நித்தியம் காட்டி
நெஞ்சினில் அன்பதை நிட்சயம் ஆக்கி
கனிவுடன் நாவினில் நல்லுரை பேசில்
வாழும் வாழ்வதும் நிதர்சனம் ஆகும்
கடல் அலை என்றும் ஓய்வதும் இல்லை
ஆசைகள் என்றும் சாவதும் இல்லை
இச்சைகள் யாவையும் சிவன்பால் செலுத்தில்
இனிமேல் எனக்கு கவலைகள் இல்லை
நேற்றது என்றும் மீண்டது வாரா
நாளைகள் என்பது வருவதும் தெரியா
இன்றைய இருப்பை உறுதியாய் அறிய
வாழ்கை என்றுமே உன்னதம் ஆகும்
புண்னகை என்றும் உதட்டினில் வீசி
மெய்யுடல் தன்னில் நீற்றினை பூசி
சிவசிவ என்றே நாளும் செபித்து
இருப்பது என்றும் நிம்மதி ஆகும்
சலனங்கள் வாழ்க்கையில் வந்தே போகும்
சஞ்சலம் கூட சகஜமும் ஆகும்
சங்கரன்மீது பாரங்கள் இறக்க
சர்வமும் இங்கே சிவமே ஆகும்
கண்களில் தெரிவதும் சிவமே ஆக
காதினில் ஒலிப்பதும் சிவமே ஆக
காற்றின் தொடுகையும் சிவமே ஆக
நுகர்ச்சியும் சுவையும் சிவமதாய் ஆகும்
புலன்கள் ஐந்திலும் சிவத்தை கண்டு
அதனைப் பலமாய் நாளும் கொண்டு
உடல் மனம் தன்னிலும் சிவத்தினைக்காண
சீவன் என்றும் சிவனே ஆகும்
என்றும் சிவனே உன்புகழ் வாழ்க
உமையொடு பிறையும் நந்தியும் வாழ்க
மானும் மழுவும் நாகமும் வாழ்க
சிவனே என்னுள் என்றுமே வாழ்க!
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏