நாம் வாழுகின்ற உலகில் எதற்கும் ஒரு தொடக்கம் இருப்பதுபோல அதற்கு ஒரு முடிவும் இருக்கிறது. இதுதான் இந்த உலகின் நியதி| அதுவே இறைவன் வகுத்து வைத்த நியதி!! ஆல்பாவும் ஒமேகாவும் என்று தொடக்கமும் அவரே, முடிவும் அவரே என்பதுபோல அவரில் தொடங்கும் வாழ்வும் அவரிலேயே முடிவு பெறுவது இயற்கை. மனித தர்மத்திற்குட்டபட்டவராக அவர் மண்ணில் மனுவுருக் கொண்டதும் ஒரு தொடக்கமே. அதுபோல சிலுவை மரணம் அவருக்கு மனித வாழ்வின் முடிவையும் தந்தது, அவரைக் கடவுளாக உயிர் பெறவும் வைத்தது. அவரே நமக்குத் 'தொடக்கமும், முடிவும் நனே' என்று தெளிவுபடுத்தியுமிருக்கின்றார். நமக்கு கிடைத்த இவ்வுலக வாழ்வும் நமக்கொரு தொடக்கத்தைக் கொடுத்து நிற்பது போன்று நமது மரணமும் நமக்கொரு முடிவை இந்த மண்ணில் கொடுக்கவே போகிறது. அந்த தொடக்கத்திற்குள்ளும், முடிவுக்குள்ளும் கடந்து போகின்ற நமது வாழ்க்கை இருக்கிறதே, அது நமக்கு ஒரு முறை கிடைக்கின்ற வாய்ப்பாகவே இருக்கின்றது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஒரேயொரு வாய்ப்பைத் தக்கபடியாக வாழ்வது நம் கைகளில்தான் உண்டு. அந்த வாழ்வை நமக்கென்று மட்டும் சுய நலமிகளாக நாம் வாழ்ந்து முடிக்கப் போகினறோமா? இல்லையேல் மற்றவர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்கின்ற ஆசையுடன் பிறர் நலம் கண்டு வாழப்போகின்றோமா என்பதை முடிவு செய்கின்ற பொறுப்பும் நம்முடையதே.
நம்மில் தொடங்குகின்ற மாற்றம் ஒன்றுதான் நானிலம் முழுவதற்குமான மாற்றமாக அமைய முடியும். நம்மில் மாற்றங்கள் உருவாக வேண்டும், நம் வாழ்வில் மாற்றங்கள் வர வேண்டும், இதைத்தானே நாளும் வாழ்வில் இறைவனிடம் கையேந்திக் கேட்கின்றோம்? சமயத்தில் நம் வாழ்வில் ஏற்படக் கூடிய மாற்றத்தை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாமலும் போகலாம். அது நமது விருப்பத்திற்குரிய மாற்றமாக இருக்காமற் போகவும் முடியும். அதையிட்டு அந்த மாற்றத்தைத் தந்த இறைவன் மீது நாம் கடுப்படையவும் கூடும். ஆனால் காலப்போக்கில்தான்; புரிய வரும்| நமக்குக் கிடைத்த மாற்றம் நம் விருப்பத்திற் கேற்றதாக அமையாதுவிடினும், அது நம்மை வளரப் பண்ணும் மாற்றமாக, நமக்குத் தேவையான மாற்றமாக அந்தந்த வேளையில் இறைவனால் நமக்குத் தரப்பட்டது என்பது நம் நெஞ்சுக்குத் தெரியவரும். அப்போது நாம் உளமாற இறைவனைப் போற்றவும் செய்வோம் என்பது மட்டும் நிச்சயம். வாழ்வும் வழியுமானவராக நம் இயேசு தெய்வம் எம்மோடிருக்க அவர் நமக்கத் தரும் அருட் கொடைகள் நம்மில் மாற்றங்களைத் தந்து நம்மை வாழ வைக்குமேயல்லாது நமக்கெதிராக செயற்பட மாட்டாது என்கின்ற அசையாத நம்பிக்கையுடன் நம் வாழ்வை
முடிவு பரியந்தம் சிறப்புடன் முன்னெடுத்துச் செல்வோம்.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்