தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார்.
அண்ணா சாலை - வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலையில் இருந்து ஊர்வலம் காலை 9.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 10.30 மணியளவில் தான் ஊர்வலம் புறப்பட்டது. இதில், கருப்பு சட்டையணிந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும், தமிழகம் முழுவதிலும் இருந்து மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் ஏராளமான தொண்டர்களும் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
ஊர்வலம் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் நிறைவு பெற்றது. அங்கு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முதல்வர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து, எம்ஜிஆர் - ஜெயலலிதா நினைவிடங்கள் அமைந்துள்ள வளாகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு வந்து, ஜெயலலிதா நினைவு தின உறுதியேற்பினை ஏற்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசிக்க, அதனை மற்றவர்கள் பின்தொடர்ந்து கூறினர்.
அந்த உறுதிமொழியில், "ஜெயலலிதா கற்றுத்தந்த பாடங்களை மனதில் நிலைநிறுத்தி தமிழக மக்களுக்கு எல்லா நேரங்களிலும் பாதுகாவலராக செயல்படும் வண்ணம் பொது வாழ்வு கடமைகளை நிறைவேற்றுவோம். மனிதாபிமானத்தையும், சமத்துவத்தையும் இரண்டறக் கலந்து செயல்பட்ட ஜெயலலிதா வகுத்தெடுத்த பாதையை எடுத்துக்காட்டாகக் கொண்டு அரசின் பணிகளுக்கு உறுதுணையாய் நிற்க அயராது உழைப்போம். வரும் நாடாளுமன்ற, இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற உழைப்போம்" என உறுதியேற்றனர்.
ஊர்வலத்தையொட்டி காலை முதலே அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.