கடந்த 2017-18-ம் ஆண்டில் பாஜகவுக்கு ரூ.ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நன்கொடைகள் வந்துள்ளதாகத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த வருமானவரித்துறை ரிட்டனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் அதிகமான நன்கொடை வாங்கிய கட்சிகளிலும் பாஜக முதலிடம் வகிக்கிறது என்று ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2017-18-ம் நிதியாண்டில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிதி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 2017-18-ம் ஆண்டில் ரூ.104 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக ரிட்டனில் தெரிவித்துள்ளது. பாஜகவின் வருவாயோடு ஒப்பிடும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வருவாய் 10 சதவீதம் மட்டுமே. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வருவாய் ரூ.1.50 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், காங்கிரஸ் கட்சி இன்னும் தனது வருமான ரிட்டன் அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை.
மேலும், இந்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி வரை தேர்தல் நிதிப்பத்திரங்கள் வெளியீட்டில் அதிகமான நிதியாக ரூ.210 கோடி பாஜகவுக்கு கிடைத்துள்ளது. அரசு வங்கிகள் ரூ.222 கோடிக்குத் தேர்தல் நிதிப்பத்திரங்கள் வெளியிட்டதில் அதில் 95 சதவீதம் பாஜகவுக்கு சென்றுள்ளது.
இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாலர் கோபால் அகர்வால் கூறுகையில், “ எங்கள் கட்சிக்குள் வரும் ஒவ்வொரு பைசாவும், பரிமாற்றமும் வெளிப்படைத்தன்மையுடன் நடக்கிறது. மக்களிடம் இருந்து நன்கொடையை ஆன்-லைன் மூலம், காசோலை மூலம், நமோ ஆப் மூலம் மட்டுமே பெறுகிறோம். மற்ற கட்சிகள் தாங்கள் எவ்வாறு பணம் பெற்றோம் என்பது குறித்து தெரிவிப்பதில்லை. ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை ஒவ்வொரு காசையும் கணக்கில் வைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வருவாய் கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.609 கோடி இருந்த நிலையில், அது ரூ.516 கோடியாகக் கடந்த ஆண்டு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.