அதேநேரம் இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சார்பில் மறு ஆய்வு மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே, ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த மாதம் 17-ந் தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது கோவிலுக்குள் நுழைய முயன்ற 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதேபோல் கடந்த 5-ந் தேதி மாலை முதல் மறுநாள் மாலை வரை கோவில் நடை திறக்கப்பட்டபோதும் போராட்டங்கள் வெடித்தன.
இந்த நிலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகியவற்றுக்காக அய்யப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 17-ந் தேதி திறக்கப்படுகிறது. 2 மாதங்கள் வரை நடை திறக்கப்பட்டு இருக்கும். எனவே, மீண்டும் இந்த விவகாரம் விசுவரூபம் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அனைத்து கட்சிகள் கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டமிட்டு இருக்கிறது.
இதுபற்றி தேவசம் மந்திரி சுரேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், “சபரிமலை தொடர்பான பல்வேறு விஷயங்கள் பற்றி பேசுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது பற்றி யோசித்து வருகிறோம். எனினும் இது தொடர்பாக இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் வெளியாகும் முடிவின் அடிப்படையில் இதுகுறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.
Attachments area