தவக் காலஙகள்; எம்மை சிந்திக்கப் பண்ணுகின்ற காலமாக இருக்கிறது என்பதை நாம் அடிக்கடி நினைவிற் கொண்டு, அந்த காலம் வருடா வருடம் வருகின்போது அதைத் தக்கபடி பயன்படுத்திக் கொள்ள நாம் முனைய வேண்டும். ஏனைய காலங்களில் நாம் ஆன்மீகச் சோதனை செய்து பார்க்க மடியும்தான். ஆனாலும் வாழ்வில் ஒவ்வொர காலமும் ஒவ்வொரு பணிக்காக நிறுத்தப்பட்டிருக்கின்ற மாதிரி, நமது உள் மனத்தை உரை கல்லில் உரைத்துப் பார்க்கத் தரப்பட்ட காலமாக தபக் காலங்கள் அமைகின்றன. கால ஓட்டத்தில் அள்ளுண்டு, பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்றாடி, மனம் போன போக்கில் வாழத்தலைப்பட்டு கடைசியில் ஒன்றுமே மிச்சமாக தேறியதில்லை என்ற இழப்பின் மேலீட்டால் வருகின்ற விரக்தியின் விளைவால் துவண்டு போய் விடுகின்றவரகளாக நாம் இன்றும் இருக்கின்றோம்.
எம் வாழ் நாள் பூராகவும் செயல் செயல் என்று, அதுவும் நமக்காக மட்டுமே அச் செயல்களைப் புரிந்து கடைசியில் என்னத்தைச் சாதித்தோம் என்று கணக்குப் பார்க்கின்ற போது அத்தனையும் வீணாகிப்போன உணரவல்லவா நம்மை மேலிடுகின்றது.
மனித மூளை என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டது என்று கூறுகிறாரகள். ஓன்று செயல் பட்டுக் கொண்டேயிருக்கின்ற பகுதி. இதன் மூலம்தான் நாம் பல காரியங்களையும் நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றோம். தூண்டுதல்களுக்கு விளைவு காட்டுகின்ற பகுதி இது. எதையும் செயற்படுத்திக் கொண்டேயிருக்கின்ற இந்தப் பகுதிதான் எமது அத்தனை செயற்பாடுகளுக்கும் காரணமாக அமைகின்றது. நாமும் எமக்காகப் பரக்கப் பரக்க ஓடியாடி செயற்படுகின்றபோது இந்தப் பகுதிதான் நம்மை ஆளுகின்றது, நம்மைச் செயற்படச் செய்கின்றது. என்ன தூண்டுதலானால் என்ன? அதற்கு மறு தாக்கத்தைக் கொடுக்கின்ற பகுதியாக இது அமைந்துவிடுகின்றது. நாமும் நமக்காக, நம் நலனுக்காக ஓயாது உழைக்க முற்பட்டு, எமது சக்தியை எல்லாம் மூளையின் இந்தப் பகுதியிலே குவித்து அதன் கட்டளைப்படி செயற்பட்டுக் கொண்டேயிருக்கின்றோம். நடைமுறைக் காலத்தின் தேவைக்களவாக நாம் செயற்பட்டுக் கொண்டேயிருக்கின்றோம். நமக்கு ஓய்வும் இல்லை, நேரமுமில்லை!
மறு புறத்தில் மூளையின் அடுத்த பகுதியாகிய மென்மையான பகுதிக்கு நாம் முக்கியத்துவம் அளிப்பதேயில்லை. இந்தப் பகுதிதான் உணர்வுகளுக்கு பொறுப்பானதாக அமைகின்ற பகுதி என்கிறாரகள். காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டதுபோல் நாம் செயற்பட்டு நமது சக்தியை மூளையின் செயற்பாட்டுப் பகுதியில் செலவிட்டுக் கொண்டு இருக்கின்றோமேயொழிய எமது உணர்வுகளுக்குப் பொறுப்பான இரண்டாவது பகுதிக்கு எமது சக்தியைச் செலவிட மறந்து விடுகின்றோம். இதனால் நமது உணர்வுகள் மழுங்கிப் போகின்றன. அடுத்தவரை எண்ணி வாழுகின்ற சந்தர்ப்பமும் எமக்கு இல்லாமற் போய்விடுகின்றது. இதனால் உழைத்துச் சோர்ந்து, களைத்து கடைசியில் ஒன்றுமே ஆகவில்லை என்று காணுகின்றபோது, அந்தச் சமயத்தில் நமக்காக Nலை செய்யவேண்டீய அந்த இரண்டாவது பகுதி போதிய சக்தியின்றி துவண்டு விடுகின்றது. இதனால் எமக்கு இரட்டிப்புப் பாதிப்பு ஏற்படுகின்றது. என்ன செய்வதென்று தெரியாது விரக்தி நிலைக்கு உட்பட்டு விடுகின்றோம்.
நாம் உழைக்க வேண்டியதுதான்! நமக்காக, நம் குடும்பத்திற்காக நாம் உழைப்பது அவசியம். அதைத் தப்பென்று யாரும் சொல்லி விட முடியாது. மாறாக, நாம் மட்டும்தான் வாழவேண்டும் என்கின்ற ரீதியில் சிந்தித்துச் செயற்பட முனைவதுதான் நம்மை உணர்ச்சியற்ற மனிதர்களாக ஆக்கி விடுகின்றது. அடுத்தவன் எப்படிப் போனாலென்ன என்கின்ற அலட்சிய சுபாவத்தை எம்மில் வளரப் பண்ணி விடுகின்றது. இதனால் மற்றவர்களிடமிருந்து நாம் நம்மைத் தனிமைப் படுத்திக் கொள்ளுகின்றோம். இதன் காரணமாக நமக்குத் தேவைப்படுகின்றபோது நமக்கென்று உதவிசெய்ய யாருமற்றவர்களாக நாம் ஆகிவிடுகின்றோம்.
நமக்கு மீட்பை, விடிவைத் தரவந்து துன்புற்ற இயேசு, இதனால்தான் அடுத்த வேளை உணவுக்காகக் கூட அதிகம் அலட்டிக் கொள்ளாதே சற்றேனும் ஓய்வாய் இரு என்று வயல்வெளிப் பூக்களையும், சிட்டுக் குருவிகளையும் தொட்டுக் காட்டிச் சொல்கின்றார். நீ என்னதான் உழைத்துச் சேர்த்தாலும் கடைசியில் எதையுமே உன்னோடு நீ கொண்டு போகப் போவதில்லை. நீ சிரமப்பட்டதை யாரோ அனுபவித்துவிட்டுப் போகின்றான்.
மாவீரன் அலெக்சாந்தர் வாழ்வு நமக்கெல்லாம் நல்ல உதாரணமாய் அமைகின்றது. நாடு, மண், வெற்றி, அதிகாரம் என்று வயதுக்கு மீறி செயற்பட்டு கடைசியில் அவனுயிரை நோய் கொண்டு போகு முன் மரணப்படுக்கையில் கடைசி ஆசையைச் சொல்கின்றான்:- 'இந்த மண்ணில பிறந்த எவருமே எதையுமே தனக்காக் கொண்டு போவதில்லை என்பதை அடுத்தவருக்கு எடுத்துக் காட்ட பாடையிலே என்னைக் கொண்டு போகும்போது என் கரங்களை மற்றவர்கள் காணும்படி வெளியில் தெரியக் கூடியதாகத் தூக்கிச் செல்லுங்கள்!' என்கின்றான்.
இவ்வாறான் சிந்தனை சய்வதற்கென்று தரப்படுகின்ற தபசு காலங்களின் மூலம் இறைமகன் கிறீஸ்து எம்மை எமக்காகவும் மற்றவருக்காகவும் சிந்திக்க அழைக்கின்றார். எமக்காக என்று சொல்லும் போது நாம் செல்லுகின்ற பாதையைச் சீர்தூக்கிப் பார்க்கவும், உணர்வு பூர்வமாக எம் வாழ்வை மதிப்பீடு செய்யவும் எம்மை அழைக்கின்றார். அதே சமயம் அயலானையும் தன்னைப் போலவே எண்ணி வாழவும் நாம் அழைக்கப்படுகின்றோம். நமது செயற்பாட்டு மூளைப் பகுதிக்குச் செலவிடும் சக்தியைக் குறைத்துக் கொண்டு, உணர்வுப் பகுதிக்கு அதிக சக்தியைச் செலவிடுவதன் மூலம் நம் வாழ்வின் போக்கிலே மாற்றத்தைக் கொண்டு வருவது பற்றி நாம் சிந்திப்போம்.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்