
கேரள ஆளுநரிடம் சபரிமலையில் நடந்தவை குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் போனில் கூறியதாகவும் அதையடுத்து ஆளுநர் முதல்வரை அழைத்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பு ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் நடந்த இந்தச் சந்திப்பில், மத்திய கப்பல் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காவல்துறையால் நடத்தப்பட்ட விதம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட குறைகள் குறித்து ஆளுநர் முதல்வரிடம் விசாரித்தார்.
காவல்துறையின் செயல்பாடுகள் மீது எழுந்துள்ள புகார்கள் குறித்தும், சபரிமலையில் 144 தடை உத்தரவை நீக்கிக் கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பம்பை, நிலக்கலில் குடிநீர், குளியலறைகள், கழிப்பறைகள் என அடிப்படைத் தேவைகளில் பற்றாக்குறை இருப்பது குறித்து ஆளுநர் விசாரித்தார். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. இவை அனைத்தும் விரைவில் சரிசெய்யப்படும் என முதல்வர் பினராயி விஜயன் ஆளுநரிடம் தெரிவித்தார்'' என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சபரிமலை விவகாரம் தொடர்பாக பல்வேறு தலைவர்களிடம் இருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் பல்வேறு புகார்கள் வந்ததை அடுத்து முதல்வரை அழைத்து ஆளுநர் பேசினார் என்றும் அந்த அறிக்கையில் தெவிக்கப்பட்டுள்ளது.
